முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது பாராளுமன்றத்திற்கு வராதது பாரிய இழப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ராமநாயக்க எதிர்வரும் காலங்களில் விடுதலை செய்யப்படுவார் என சஜித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முதுகு மற்றும் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
ராமநாயக்கவை இன்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித், ரஞ்சன் ராமநாயக்கவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராமநாயக்க நாட்டிற்கு ஒரு வளம், ஒரு சமூக சேவகர், மனிதாபிமானம் கொண்டவர், அவர் சிறையில் இருக்கக்கூடாது. தனது தனிப்பட்ட சிரமங்களை ஒதுக்கி மக்களுக்காக உழைத்தவர் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி தலையிட்டு அவரை விடுதலை செய்வதற்கும் அவரது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என சஜித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.