கனடாவின் வான்கவர் நகரை நோக்கி கடல் வழி பயணம் செய்த MV ஜிம் கிங்ஸ்டன் கப்பலில் உள்ள இரண்டு கொள்கலன்களில் தீப்பற்றியதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகரான விக்டோரியாவில் நங்கூரமிடப்பட்ட கப்பலில் சனிக்கிழமை தீ பரவிய தொடங்கிய பின்பு கனடாவின் கடலோர காவல்படை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு மீட்பு மையம் இணைந்து கப்பலில் இருந்த குழு பணியாளர்களை வெளியேற்றியுள்ளனர்.
கப்பலானது கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கப்பலில் தீ தொடர்ந்து பரவி வருவதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கப்பலின் மேல் தளத்தில் உள்ள 2 கொள்கலன் தீப்பற்றி தண்ணீருக்குள் விழுகின்ற காணொளி ரொய்ட்டர்ஸ் மூலம் பெறப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து விழுந்த இரண்டு கொள்கலன்களும் கடலில் மிதப்பதாகவும் ,கப்பல் தீப்பற்றி நச்சு வாயுவை வெளியேற்றுவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை என்று கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கடலில் அதிக அளவிலான காற்று வீசுவதால் தீவிரமாக தீ பரவும் அபாயம் உள்ளது. இது கப்பலில் உள்ள கொள்கலன்களை தீயிலிருந்து மீட்டெடுப்பது சிரமமாக்கும் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நிலைமை தீவிரமடைந்தால் பொது எச்சரிக்கையை தொடங்குவதற்கு நகரம் தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் தீ விபத்தினால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்து மிகக்குறைவு என்று டுவிட்டரில் ஸ்டீபன் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
கடற்கரையின் விக்டோரியா நிலையத்திலிருந்து உயிர்காக்கும் படகு ஜிம் கிங்ஸ்டன் கப்பலுக்கு அருகே பாதுகாப்பு கப்பலாக செயல்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.