தமது கருத்துக்களை அரச தலைமை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லையென, பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகள் தீவிர ஏமாற்றமடைந்துள்ளன. இதனால் பெரமுன கூட்டு விரைவில் ஆட்டம் காணலாமென நம்பப்படுகிறது.
அரசின் போக்கினால் பங்காளிக்கட்சிகள் அதிருப்தியடைந்திருந்த நிலையில், கெரவலப்பிட்டிய, யுகதானவி மின் நிலைய விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்தமையே இதற்கான உடனடி காரணமாகும்.
கடந்த வாரம் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், யுகதனவி அனல்மின் நிலைய விவகாரத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்றும், அரசியல் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச அல்லது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் விவாதிக்கலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் ஆணுகுமுறையினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி, எங்கள் மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அதிருப்தியுடன் உள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் இன்று (23) எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அசங்க நவரத்ன, டிரான் அலஸ் கெவிந்து குமாரதுங்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார் என்று அறியப்படுகிறது.