29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா?: என்.ஐ.ஏ விசாரணை கோரும் காங்கிரஸ்!

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவின் மினிக்காய்உகடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 கிலோ தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த 6 பேர் அளித்த தகவலின் பேரில் இலங்கையை சேர்ந்த சற்குணன் என்கிற சபேசன் குறித்து தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களையும் ஆயுதங்களையும் கடத்தி விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் வேலைகளில் சற்குணன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, வளசரவாக்கத்தில் தங்கியிருந்த சற்குணனின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 6ஆம் தேதி என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒக்டோபர் 5 ஆம் தேதியன்று புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணன் என்கிற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகள் அமைப்பின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் அனுதாபிகளோடு அவர் சதிக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்குணனின் கைது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் சீமான் பேசியது, சமூக ஊடகங்களில் வெளியானது. இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசனை என்.ஐ.ஏ கைது செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த இவரிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும் தமிழ்நாட்டில் இருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.

இவர் ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு அண்மையில்தான் வெளியில் வந்திருக்கிறார். சர்வதேச போதைக் கடத்தலில் சம்பந்தப்பட்டு பாகிஸ்தான், துபாய், இலங்கை என தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவாளர்கள் இவர் மூலமாக பெரும் நிதியை வழங்கி வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் தேச விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் தெரிவிக்கையில், “சற்குணன் கைதை நாம் தமிழர் கட்சியோடு காங்கிரஸ் கட்சி பொருத்திப் பார்த்துப் பேசுகிறது. அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக கே.எஸ்.அழகிரியின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளைத்தான் எடுக்க வேண்டும். எதையாவது ஒன்றைப் பேச வேண்டும் என்ற அடிப்படையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வளசரவாக்கத்தில் சற்குணன் குடியிருந்ததால், `அவருடன் எங்களுக்குத் தொடர்பு’ என வன்மத்தில் பேசுவதாகவே இதனைப் பார்க்கிறோம். உண்மைக்குப் புறம்பான அறிக்கை அது” என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment