ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய 50வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் ரொஸ் வென்ற ரிஷப் பாண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களிலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அம்பத்தி ராயுடு மற்றும் கப்டன் டோனி ஆகியோர் நிலைத்து ஆடினர். அம்பத்தி ராயுடு மிக சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதி ஓவரில் டோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 136 ரன்கள் எடுத்தது. டெல்லி அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணியில் அம்பத்தி ராயுடு 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தப்பா 19 ரன்களும், டோனி 18 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணியில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும், அவேஷ் கான், ஆண்டிரிச், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து டெல்லி அணி துப்பெடுத்தாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (18) மற்றும் ஷிகர் தவான் (39) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதேபோன்று, ஸ்ரேயாஸ் (2), ரிஷாப் பண்ட் (15), ரிபல் (18), ரவிசந்திரன் அஸ்வின் (2) மற்றும் ஷிம்ரன் (28) ரன்களில் வெளியேறினர்.
19.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு டெல்லி அணி 139 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



