கடந்த ஆண்டில் அதானி நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் என்று ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளது.
கவுதம் அதானி குடும்பம்ரூ.5.05 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2ஆம் இடம் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.1,000 கோடிஅளவில் அளவில் அவருடைய குடும்பம் வருமானம் ஈட்டியுள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1.40 இலட்சம் கோடி சொத்து மதிப்பைக்கொண்டு இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் 4 வது இடத்தில் அதானி இருந்தார்.
இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.5.05 இலட்சம் கோடியாக உயர்ந்து 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
3வது இடத்தில் சிவ் நாடார் குடும்பம் உள்ளது. சென்றஆண்டில் சிவ் நாடார் குடும்பத்தின் சொத்து மதிப்பு 67 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 இலட்சம் கோடியாக உள்ளது. நாளொன்றுக்கு ரூ.260 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளனர்.
எஸ் பி இந்துஜா குடும்பம் 4வது இடத்தில் உள்ளது. அவர்களது வருமானம் சென்ற ஆண்டு நாளொன்றுக்கு ரூ.209 கோடியாக இருந்துள்ளது. அவர்களது சொத்துமதிப்பு 53% அதிகரித்து ரூ.2.20 இலட்சம் கோடியாக உள்ளது.
5வது இடம் பிடித்துள்ள எல் என் மிட்டல் குடும்பம், சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.312 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 187 சதவீதம் உயர்ந்து ரூ.1.7 இலட்சம் கோடியாக உள்ளது.
அதானி குழுமம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.