நாட்டில் 41 நாட்கள் அமுலில் இருந்த தனிப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டது. எனினும், மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென, கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்பத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது. இதனால் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை 4.00 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டது.
ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், பேணப்பட வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் அரச சேவைகளை வழமைக்கு கொண்டு வரும் வகையில், இன்று (01) முதல் அரசாங்க சேவைகளை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
அத்துடன், ஊரடங்கு நீக்கப்பட்டாலும், எதிர்வரும் 2 வாரங்களுக்கு புகையிரத சேவைகளை முன்னெடுக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பயணிகள் பஸ்கள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இயங்குமெனவும் தெரிவித்துள்ளார்.