தனது யூடியூப் சேனல் மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தில் உள்ள பாரூச் நகரில் டெல்லி –மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டப்பணிகள் குறித்த ஆய்வை நிதின் கட்கரி மேற்கொண்டார்.அதைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் புதிய சாலைப் பணிகள் குறித்தும், கரோனா காலஅனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். கரோனா காலத்தில் அவருடைய அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில் “இந்த கரோனா காலகட்டத்தில் இரண்டு வேலைகள் செய்தேன். ஒன்று சமையல் கலைஞராக மாறி வீட்டில் சமையல் வேலைகள் செய்தேன். மற்றொன்று, இணையவழியாக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று உரைகள் நிகழ்த்தினேன். வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்களுக்கும் இணைய வழி விரிவுரை வழங்கியிருக்கிறேன். இதுவரையில் 950 உரைகள் நிகழ்த்தியிருக்கிறேன். அவற்றை எல்லாம் என்னுடையயூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளேன். இந்தக் கரோனா காலகட்டத்தில் என்னுடைய சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் என்னுடைய யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
நிதின் கட்கரி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் சேனல் தொடங்கினார். அவருடைய உரைகள், பேட்டிகள் போன்றவற்றை அந்தச் சேனலில் பதிவேற்றி வருகிறார். தற்போது அவரது சேனலை 2.12 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.