26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
குற்றம் முக்கியச் செய்திகள்

கள்ளக்காதல்… நம்பிக்கைத் துரோகம்… கடலில் மிதந்த சடலம்: வெளிச்சத்திற்கு வந்த இராணுவப் புலனாய்வாளர்களின் கொலை!

கொழும்பு, மட்டக்குளியில் ஒருவரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் இராணுவப் புலனாய்வு பிரிவின் குழுவொன்று ஈடுபட்டது விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. அந்த முகாமில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல புலனாய்வாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

புலனாய்வாளர் ஒருவருக்கும், பெண் கிராம சேவகருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலை தொடர்ந்து இந்த கொலை இடம்பெற்றது.

மட்டக்குளி, சுமித்புர கிராம சேவகரான 35 வயதான அசிரி உதயங்கிகா அந்தோனியின் கணவரான, 37 வயதான அகில சம்பத் ரத்னசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஓகஸ்ட் 17 அன்று இந்த கொலை நடந்தது.

கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவினரால், பெண் கிராம சேவகர் மற்றும் சுமார் 10 இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

மட்டக்குளி இராணுவ முகாமின் புலனாய்வாளராக கோப்ரல் சுசந்த பெரேரா என்பவருக்கும், பெண் கிராம சேவகருக்குமிடையிலான கள்ளக்காதலையடுத்து, மற்றைய இராணுவ வீரர்களின் ஒத்துழைப்புடன் கொலை நடத்தப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்

ஓகஸ்ட் 19ஆம் திகதி பிற்பகல் ராகம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர், தன்னை மட்டக்குளி பகுதி கிராமசேவகர் என அடையாளப்படுத்தி, தனது கணவன் காணாமல் போனமை குறித்து முறைப்பாடு செய்தார்.

தனது கணவனை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என கண்ணீர் விட்டு கதறியழுதார்.

ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில், காணாமல் போனவரின் சகோதரியும் பொலிஸ் நிலையம் வந்து முறையிட்டார்.

36 வயதான அகில சம்பத் ரத்னசிறி திடீரென காணாமல் போன சம்பவம் குறித்து ராகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதற்கிடையில், ஓகஸ்ட் 20 பகல் பொழுதியில், காக்கைதீவு பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக மட்டக்குளி பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். கை,கால்கள் கட்டப்பட்டு, உடலில் கல்லு கட்டப்பட்டு, சடலம் வீசப்பட்டிருந்தது. அத்துடன், அடையாளம் காண முடியாதளவில் வீங்கியிருந்தது.

மோதர அல்லது சுற்றியுள்ள பகுதியில் காணாமல் போனவர் குறித்து போலீசாருக்கு எந்த புகாரும் வந்திருக்காததால், பொலிசாரால் சடலத்தை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. எனினும், இது ஒரு மர்மமான கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அடையாளம் தெரியாத நபரின் சடலம் குறித்து மட்டக்குளி பொலிஸார், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ராகம பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்குளி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கிராம சேவகர் உதயங்கிகா மற்றும் அகில சம்பத்தின் சகோதரி ஆகியோர் பொலிசாருடன் பிணவறைக்கு வந்தனர். அந்த சடலம் தனது கணவர் அகிலா சம்பத் என உதயங்கிகா அடையாளம் காட்டினார். அகிலா சம்பத்தின் சகோதரியும் சடலத்தை தனது சகோதரரின் உடலாக அடையாளம் காட்டினார்.

விளையாட்டு வீரனின் பாதையை மாற்றிய போதை

மர்மமாக உயிரிழந்த அகில சம்பத் ரத்னசிறி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை ஊகித்த பொலிசார், அதன் பின்னணியை தேடத் தொடங்கினர்.

அகில சம்பத்தின் மனைவி, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து விசாரணையை ஆரம்பித்து வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

அகில சம்பத் ராகமவை சேர்ந்தவர். அவருக்கு ஒரே ஒரு மூத்த சகோதரி இருந்தார். அகில அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட எல்லை விளையாட்டு வீரர். இலங்கையின் பிரபலமான எல்லை விளையாட்டு அணிகளில் அவர் விளையாடினார். அந்தப்பகுதி இளைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்.

எல்லை விளையாட்டில் அவர் சிறந்து விளங்கியதையடுத்து, துறைமுக அதிகாரசபையின் அணியில் இணைக்கப்பட்டார். அந்த அதிகாரசபையிலேயே வேலையும் கிடைத்தது.

அகிலா சம்பத் துறைமுக அதிகாரசபையில் பணிபுரியும் போது காதல் கதை தொடங்குகிறது. உஸ்வேதகெயாவவில் வசித்து வந்த உதயங்கிகாவை சந்தத்து காதல் வசப்பட்டார்.

இருவரின் திருமணம் ஐந்து வருடங்களின் முன்னர் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, உதயங்கிகா, ராகம வால்பொலவில் உள்ள அகில சம்பத்தின் வீட்டில் தங்கினார். உதயங்கிகாவுக்கு 2014 இல் கிராம சேவகராக வேலை கிடைத்தது. மட்டக்குளிய, சுமித்புர பகுதி கிராம சேவகராக பணிபுரிந்தார். மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தை ஒட்டிய கோவில் வளாகத்தில் இந்த அலுவலகம் இருந்தது.

இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள்.

அமைதியாக இருந்த அவர்களின் குடும்பத்திற்குள் திடீரென புயல்வீச தொடங்கியது. அது, அகில சம்பத்தின் போதைப் பாவனை வடிவத்தில் வந்தது. போதைக்கு அடிமையான அவர், படிப்படியாக விளையாட்டு வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான அவர், நாள் முழுவதும் போதையில் இருக்க ஆரம்பித்தார். மனைவி, பிள்ளைகள், வேலை எல்லாம் இரண்டாம் பட்சமாகியது. இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் எழ தொடங்கியது.

பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் போதையில் பொழுதை கழித்தார். விளைவு- துறைமுக அதிகாரசபையிலிருந்து நீக்கப்பட்டார்.

வேலையிழந்ததை தொடர்ந்து குடும்பத்திற்குள் மோதல் தீவிரமடைந்தது.

இந்த சமயத்தில்தான், தனது உறவுக்கார பெண் ஒருவருடன், அகிலவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. உதயங்கிகாவினால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கணவனை தாறுமாறாக திட்ட ஆரம்பித்தார்.

இதையடுத்து, திடீரென வீட்டை விட்டு வெளியேறிய அகில சம்பத்,  ஹொரணையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளக்காதலியுடன் வாழத் தொடங்கினார். உதயங்கிகாவும் 3 பிள்ளைகளும் ராகம வீட்டில் வசித்து வந்தனர்.

இதற்குள், மட்டக்குளி இராணுவ முகாமில் உள்ள புலனாய்வுப்பிரிவு கோப்ரல் சுசந்த பெரேராவுடன், உதயங்கிகாவிற்கு அறிமுகம் ஏற்பட்டு, காதலாகியது.

அந்த பகுதி கொரோனா கட்டுப்பாட்டு தகவல்களை சேகரிக்கும் பணியில் இணைக்கப்பட்ட இராணுவ புலனாய்வு குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார்.

இரண்டு வருடங்கள் காதலியுடன் வாழ்க்கை நடத்திய அகிலவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஜா எல பகுதியில் ஒரு ஹொட்டலில் காதலியுடன் தங்கியிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, காதலி உயிரிழந்தார்.

அதன் பின்னர், ராகமவிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பி, மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். அதன்பின், அவர் வீட்டிலேயே தங்கியிருந்தாலும், தினமும் தம்பதியினரிடையே மோதல் ஏற்பட்டது.

அத்துடன், இப்போது அகில சம்பத் ஒரு போதைப்பொருள் வியாபாரியாகவும் மாறியிருந்தார்.

அகில சம்பத் நீர்கொழும்பு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை ராகம வல்பொல உட்பட பல பகுதிகளுக்கு விநியோகித்தார். போதைப்பொருட்களுக்கு அதிக அடிமையாக இருந்த அகிலா சம்பத், நாளின் பெரும்பகுதியை போதையிலேயே கழித்தார்.

இந்த சமயத்தில் இராணுவ கோப்ரலுடனான நெருக்கம், உதயங்கிகாவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தது. படிப்படியாக அவர்களிடையே வளர்ந்த நட்பு பின்னர் விவகாரமாக மாறியது.

கொலையும் செய்யும் கள்ளக்காதல்

இந்த விவகாரத்தை அகில சம்பத் அறிந்தார். மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கத் தொடங்கினார்.

இந்த சித்திரவதைகளை சகிக்க முடியாமல், உதயங்கிகா தனது பிள்ளைகளுடன் உஸ்வேதnகயவவில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

அங்கும் போதையில் வரும் அகில சம்பத், மனைவியை கொடூரமாக தாக்கி, உடலுறவு என்ற பெயரில் வக்கிரங்களில் ஈடுபட தொடங்கினார். உதயங்கிகாவிற்கு இது பெரும் சித்திரவதையாக மாறியது. பிள்ளைகளும் தந்தையிடமிருந்து கொடுமையை அனுபவித்தனர்.

தனது துன்பங்களை கள்ளக்காதலனான இராணுவ கோப்ரலிடம், உதயங்கிகா கொட்டத் தொடங்கினார். காதலியை மீட்க முடிவு செய்த அவர், மட்டக்குளி இராணுவ முகாமிலுள்ள உயரதிகாரியிடம் சென்று, அகில சம்பத் பற்றி சொல்லியுள்ளார்.

கொஞ்சம் கூடவே சொல்லி, உயரதிகாரியிடமிருந்து ஒரு உத்தவை பெறுவதே கோப்ரலின் திட்டம்.

‘சேர். அகில சம்பத் ஒரு பாதாள உலக நபர். பெரிய அளவில் போதைமருந்து வியாபாரம் செய்கிறார். அவர் முழு மாகாணத்திற்கும் விநியோகிக்கிறார். அவருக்கு ஏதாவது செய்யப்படாவிட்டால், அது ஒரு பேரழிவாக இருக்கும்“ என மேலதிகாரியிடம் சொன்னார்.

“அவர் அத்தகைய குணாதிசயமுள்ளவராக இருந்தால், நாங்கள் அவரை அகற்றுவோம். அந்த உண்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”

முகாமின் உயர் அதிகாரியிடமிருந்து கோப்ரல் தனக்கு தேவையான உத்தரவைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதற்கிடையே அகில சம்பத்துக்கும், உதயங்கிகாவுக்கும் இடையே தகராறு அதிகரித்தது. கணவர் தன்னை கொன்றுவிடுவார் என்ற சந்தேகத்தில், அகில சம்பத்தில் இருந்து தப்பிக்க தன் மூன்று குழந்தைகளுடன் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கண்டி வெள்ளம்பாடையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றார்.

அங்கிருந்தபடியே கோப்ரலிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விடயத்தை கூறியுள்ளார்.  “என்னால் இனி அங்கு இருக்க முடியாது. அந்த நபர் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்.”

“பயப்படாதே. அவரை அகற்றுவதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. கவலைப்பட வேண்டாம். வீட்டுக்கு திரும்ப வா. நாங்கள் இந்த வேலையை முடிப்போம், ”என்று கோப்ரல் நம்பிக்கையூட்டினார்.

“ஓ, இது ஒரு பெரிய விஷயம். நாளை அந்த வேலையை முடிப்போம். எனக்கு ஆறுதல் வேண்டும். இந்த மூன்று குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். நான் நாளைக்கு வருவேன். ”

மறுநாள், கோப்ரலின் அறிவுறுத்தலின் பேரில், உஸ்வேதகெயவவில் உள்ள தனது  வீட்டிற்கு உதயங்கிகா திரும்பினார்.

“நாளை அவரை அழைத்துச் செல்வோம். நீங்கள் எங்களுக்காக ஒரு சிறிய வேலையைச் செய்ய வேண்டும். அவரை மட்டக்குளிக்கு அழைத்து வர வேண்டும்“ உதயங்கிகாவிடம் கோப்ரல் கேட்டுக் கொண்டார்.

அகில சம்பத்தை கடத்த கோப்ரல் ஒரு வாகனத்தை தயார் செய்தார். உயர் அதிகாரியின் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவின் பேரில் அகில சம்பத்தின் கொலையில் மேலும் ஐந்து வீரர்கள் ஈடுபட்டனர்.

தனது மனைவி உஸ்வேதகெயவவில் உள்ள வீட்டிற்கு திரும்பிய தகவலறிந்ததும், அகில சம்பத் தொலைபேசியில் அழைத்தார்.

“நீங்களும் கோப்ரலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்ததெல்லாம் எனக்கு தெரியும்.  இனி நீங்கள் என்னுடன் இருக்க முடியாது. நீங்கள் அவர்களுடன் நான்கு சுவருக்குள் ஆடிய நாடகங்கள் எனக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? நான் உங்களை உடனே சந்திக்க விரும்புகிறேன்” என அகில சம்பத் தொலைபேசியில் மனைவியை மிரட்டினார்.

“சரி, நீங்கள் நாளை மட்டக்குளியில் உள்ள என் அலுவலகத்திற்கு வாருங்கள். இந்த பிரச்சனையை முடித்துக் கொள்வோம்.” கோப்ரலின் திட்டப்படி, கணவனை மட்டக்குளிக்கு அழைத்தார், கிராமசேவகர் உதயங்கிகா.

மறுநாள், ஓகஸ்ட் 17 அன்று, காலை 11.00 மணியளவில், அகில சம்பத் தனது மோட்டார் சைக்கிளில் மட்டக்குளியில் உள்ள உதங்கிகாவின் அலுவலகத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் உதயங்கிகா அலுவலகத்தில் இல்லை.

அலுவலகத்தில் இருந்த பெண்களிடம், உதயங்கிகா எங்கேயென கேட்டார்.

உதயங்கிகா ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை போலவே, அவர் வர சற்று தாமதமாகும் நீங்கள் காத்திருங்கள் என பெண்கள் பதிலளித்தனர்.

இதற்குள் கோப்ரல் உள்ளிட்ட இராணுவக் குழுவினர், கிராம சேவகர் அலுவலகத்திற்கு அருகில் காத்திருந்தனர்.

கோப்ரலும் மற்றும் பிற வீரர்களும் அகில சம்பத்தை அணுகி எந்தவித சலசலப்பும் இல்லாமல் அவரை வாகனத்தில் ஏற்றினர்.

“நாங்கள் உங்களை விசாரிக்க வேண்டும். நீங்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் உள்ளது. எனவே வம்பு இல்லாமல் வாகனத்தில் ஏறுங்கள்“ என  கோப்ரல் இட்ட உத்தரவின்படி, அகில சம்பத் வாகனத்தில் ஏறினார்.

ஒரு வீரர், அகில சம்பத்தின் மோட்டார் சைக்கிளை எடுத்தார். அந்த மோட்டார் சைக்கிள்  மட்டக்குளி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அகில சம்பத்தை கடத்தி கொழும்பில் பல இடங்களிலும் தடுத்து வைத்து, இறுதியாக மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு காட்டுக்கு அழைத்து சென்றனர்.

அகில சம்பத் கடத்தப்பட்டதிலிருந்து அனைத்து தகவல்களையும் முகாமில் உள்ள தனது உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க கோப்ரல் தவறவில்லை.

அகில சம்பத்தை கொன்றதன் பின்னணியில் தனிப்பட்ட உள்நோக்கம் இருப்பதாக கோப்ரலுக்கு மட்டுமே தெரியும். அகில சம்பத்தை கடத்த வந்த வீரர்கள், பாதாள உலகத்துடன் தொடர்புடைய பெரிய அளவிலான போதைப்பொருள் விற்பனையாளரை அழைத்துச் சென்று கொல்ல திட்டமிட்டுள்ளதாக நினைத்தனர்.

அகில சம்பத் மாதம்பிட்டிய பகுதியில் மக்கள் வசிக்காத காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் கைவிலங்கிடப்பட்டு இரவு வரை தடுத்து வைக்கப்பட்டார்.

கொலைக்கு உத்தரவிட்ட உயரதிகாரி

அகில சம்பத்தை கொன்று காரியத்தை முடிக்க 17 ஆம் திகதி இரவு முகாமின் உயர் அதிகாரி மாதம்பிட்டிய பகுதிக்கு ஒரு வாகனத்தை அனுப்பியிருந்தார்.

ஒரு கட்டத்தில்அகில சம்பத் கைவிலங்கிடப்பட்டிருந்த இடத்திற்கு வந்த கோப்ரல், தனது மொபைல் போனின் ஸ்பீக்கரை செயல்படுத்தி உயர் அதிகாரியின் உத்தரவை அனைவருக்கும் கேட்க வைத்தார்.

அன்றிரவு கொலையை செய்யவும், சடலத்தை ஒரு கற்பாறையைக் கட்டி ஆற்றில் எறியவும் உயரதிகாரி உத்தரவிட்டார். “ஆற்றில் போடுவதற்கு முன் வயிற்றை கிழிக்க மறக்காதீர்கள். இல்லையென்றால், உடல் மீட்கப்படும். அப்படி நடந்தால் பிரச்சனையாகி விடும்“ உயரதிகாரியின் உத்தரவை கேட்டு அனைவரும் அடுத்த பணிக்கு தயாரானார்கள். அகில சம்பத் மரண பயத்தில் இருந்தார்.

“தயவுசெய்து, என்னைக் கொல்லாதீர்கள். எனக்கும் அந்த பெண் வேண்டாம். நான் இந்தப் பகுதியை விட்டு எங்காவது போய்விடுகிறேன். என்னைக் கொல்லாதீர்கள்” அகில சம்பத் இராணுவத்தினரிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். ஆனால் இதயமுள்ள யாரும் அங்கு இருக்கவில்லை.

ஓகஸ்ட் 17 ஆம் திகதி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கோப்ரலின் உத்தரவின் பேரில், மூன்று வீரர்கள் செயலில் ஈடுபட்டனர். ஒருவர் தலையணையை எடுத்து அகில சம்பத்தின் முகத்தை அழுத்தினார், மற்ற இருவரும் அவரை கழுத்தை நெரித்தனர். அகில சம்பத் கொல்லப்பட்டார்.

முகாம் உயரதிகாரி அனுப்பிய வாகனத்தில் சடலத்தை எடுத்துச் சென்று சேடவத்தையில் உள்ள கருப்புப் பாலத்திலிருந்து கீழே போட திட்டமிட்டனர்.

எனினும், உயரதிகாரியின் உத்தரவின்படி, சடல்தின் வயிற்றை கிழிக்க தயங்கினார்கள்.

உடலை கல்லுடன் கட்டி, களனி ஆற்றில் வீசினர்.அகில சம்பத் என்றென்றும் களனி ஆற்றின் அடிப்பகுதியில் இருப்பார் என்று நினைத்து இராணுவ குழு மட்டக்குளிய முகாமுக்குத் திரும்புகிறது. இதற்கிடையில், அகில சம்பத்தின் மோட்டார் சைக்கிளை மட்டக்குளிய முகாமில் கழற்றி, களனி ஆற்றின் பல இடங்களில் வீசினர்.

அகிலா சம்பத்தின் மரணம் மூழ்கடிக்கப்பட்ட ஒரு மர்மமாக என்றென்றும் இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தாலும், அவர் அதை பொய்யாக்கி, காக்கைதீவில் மிதந்தார்.

இதன் பின்னர் அனைத்தும் தலைகீழாக மாற தொடங்கியது.

அகில சம்பத்தின் கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான டிஐஜி தேசபந்து தென்னகோன், கொழும்பு மாவட்டத்தின் டிஐஜி சந்திரகுமார, எஸ்எஸ்பி அமல் எதிரிமன்ன மற்றும் எஸ்பி அஜித் அபேவிக்ரம ஆகியோரின் முழு மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகிறது.

கொலை  விசாரணை மட்டக்குளி காவல்துறையிலிருந்து மாற்றப்பட்டு கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினர், உதயங்கிகாவின் மொபைல் போன் தரவை சோதித்து, சந்தேகத்திற்கிடமான எண்ணைக் கண்டறிந்தனர். அந்த சமயத்தில், உதயங்கிகாவிற்கும் அகில சம்பத்துக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்ததை பொலிசார் கண்டறிந்தனர். அப்போதிருந்து, கொலையில் உதயங்கிகாவிற்கும் தொடர்பு இருf்கலாமென பொலிசார் சந்தேகித்தனர்.

உதயங்கிகாவின் தொலைபேசியுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்திற்குரிய எண் மட்டக்குளிய முகாமில் உள்ள கோப்ரல் சுசந்த பெரேராவின் எண் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர். எனினும், கொலையில் அவர் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

உதயங்கிகாவின் அலுவலகத்தில் பணிபுரியும் நான்கு இளம் பெண்களை பொலிசார் நீண்ட நேரம் விசாரித்ததில், முடிச்சு அவிழத் தொடங்கியது.

சுமார் ஒன்றரை வருடங்களாக கோப்ரலிற்கும் உதயங்கிகாவிற்குமிடையிலான தொடர்பையும், அகில சம்பத் அலுவலகத்திற்கு வந்த போது கோப்ரல் ஒரு வாகனத்தில் அழைத்து சென்றதையும்  அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு இளம் பெண்  வெளிப்படுத்தினார்.

பின்னர் பொலிசார், உதயங்கிகா மற்றும் கோப்ரலை கைது செய்தனர். அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையின் போது அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டன. இறுதியில், அகில சம்பத்தின் கொலையில் ஈடுபட்ட ஐந்து வீரர்களை மட்டக்குளி முகாமில் பொலிசார் கைது செய்தனர்.

கோப்ரலின் பொய்யான தகவலின் படி, அகில சம்பத்தை கொலை செய்ய உத்தரவிட்ட மட்டக்குளி முகாமின் உயர் அதிகாரியும் இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

Leave a Comment