ஐக்கிய அமீரகத்தில் ஒக்டோபர் மாதம் நடைபெறும் ரி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரி20 இந்திய அணியின் கப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருக்கிறார்.
சமீபகாலமாகவே இந்திய அணியின் கப்டன் கோலியின் துடுப்பாட்டம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை கோலி வெளியிட்டுள்ளார். எனினும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலியே கப்டனாகத் தொடருவார்.
இதுகுறித்து கோலி வெளியிட்ட அறிவிப்பு:
“பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்த பிறகே ரி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ரி20 இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தேர்வுக் குழு தலைவர் கங்குலி ஆகியோரிடமும் பேசினேன். நான் இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அணிக்கும் சிறந்த முறையில் சேவை செய்வேன்.
பணிச்சுமையைப் புரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம். கடந்த 8-9 ஆண்டுகளாக ரி20, ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கப்டனாக இருந்து வருகிறேன். எனது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு விலகுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாகத் தயாராக இருக்க எனக்கு இடம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் ரி20 கப்டனாக இருந்த காலத்தில் அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டேன். ரி 20 அணிக்காகத் தொடர்ந்து பேட்ஸ்மேனாகச் சிறப்பாக விளையாடுவேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அணியின் வீரர்கள், பயிற்சியாளர், பிற பணியாளர்கள், இந்தியா வெற்றி பெற நினைத்த அனைத்து இந்தியர்களுக்கும் எனது நன்றி”.
இவ்வாறு கோலி பதிவிட்டுள்ளார்.