தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்: தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து தயாரான இரண்டாவது கடித மர்மம் என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டது? புலிகளின் போர்க்குற்றத்தை சுட்டிக்காட்டிய தமிழ் அரசு கட்சியின் கடிதத்திற்கு மாற்றாக இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டதா போன்ற சர்ச்சைகள் அண்மைய நாட்களில் தமிழ் அரசியல் பரப்பில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் புலிகளின் போர்க்குற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, தமிழ் அரசு கட்சியின் கடிதத்தினால் அதிருப்தியடைந்த தரப்புக்கள் இரண்டாவது கடிதத்தை அனுப்ப தயாராகிறார்கள் என்ற தகவல்களை தமிழ்பக்கமே முதலில் வெளிப்படுத்தியது.

இந்த இரண்டு விடயங்களும் தமிழ் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

இதில் முக்கியமானது- இலங்கை தமிழ் அரசு கட்சியின் தரப்பிலிருந்து இரண்டாவது கடிதம் அனுப்ப தயாரான விவகாரம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் அதில் கையெழுத்திட்டிருந்தனர். அந்த கடிதத்திற்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என தலைப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தையும் தமிழ்பக்கம் முதலில் வெளிப்படுத்தியது. கட்சியின் 9 பிரமுகர்கள் கையெழுத்திட்டு ஆவணமொன்றை அனுப்ப தயாராகும் விவகாரத்தை தமிழ் பக்கம் வெளிப்படுத்தியதை தொடர்ந்து, அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி, போலிக்கையெழுத்து என்றால் வழக்கு தொடர்வேன் என சுமந்திரன் எகிற, நாம் கையெழுத்திட்டோம், ஆனால் அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார் சி.சிறிதரன்.

9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் ஆவணம் தயாராகிய விவகாரத்தை தமிழ் பக்கம் வெளிப்படுத்தியதை தொடர்ந்து, பல ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரமுகர்களை தொடர்பு கொண்ட போது, அப்படியொரு ஆவண தயாரிப்பில் ஈடுபட்டதை மறுத்திருந்தனர்.

எனினும், பின்னர் தமிழ்பக்கம் 9 பிரமுகர்களின் கையொப்பத்தையும் பகிரங்கப்படுத்தியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கையெழுத்திட்டதை ஏற்றுக்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், காலஅவகாசம் போதாமையினாலும், வேறு சில காரணங்களாலும் கடிதம் அனுப்ப முடியவில்லை என விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தை முதலில் வெளிப்படுத்திய தமிழ்பக்கம், அப்போது நடந்த பின்னணி தகவல்களையும் அறிந்திருந்தது. எனினும், சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளக்கம் வெளியாகும் வரை, அந்த தகவல்களை வெளிப்படுத்துவதை தாமதப்படுத்தி வந்தோம்.

சம்பந்தப்பட்ட தரப்பினர்களே இப்பொழுது விளக்கமளித்து, “வேறு சில காரணங்களால்“ கடிதம் அனுப்ப முடியவில்லையென விளக்கமளித்திருந்தனர். அந்த கடிதத்தை அனுப்ப முடியாமல் போன, “வேறு சில காரணங்கள்“ எவை என்பதை பற்றிய சில தகவல்களை தருகிறோம்.

அதற்கு முதல், இன்னொரு விடயத்தையும் பேச வேண்டும். தமிழ்பக்கம் அந்த செய்தியை வெளியிடுவதில் “சற்று அவசரம்“ காண்பித்ததே, கடிதம் அனுப்பப்பட முடியாமல் போகும் சூழலை உருவாக்கியது. புலிகளின் போர்க்குற்றங்களையும் சுட்டிக்காட்டிய கடிதமொன்றை இலங்கை தமிழ் அரசு கட்சி தயாரித்த போது, அந்த நிலைப்பாட்டிற்கு மாறாக- தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் ஒன்றிணைய அந்தக்கட்சியில் 9 பிரமுகர்கள் இருந்தார்கள் என்பதே பாராட்டுதலுக்குரிய விடயம். தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் அரசு கட்சியும் “கொழும்பு சிந்தனையை“ நோக்கி மடைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதை நிராகரிக்க 9 பேராவது துணிந்தார்கள் என்பதே, சற்று நம்பிக்கையளிக்கும் விடயம்தான்.

தமிழ்பக்கம் காட்டிய சற்று அதிக வேகமும், ஆவணத்தை தயாரித்தவர்கள் அதை அனுப்புவதில் காட்டிய சுணக்கமும் ஒன்றாக, விவகாரம் சிக்கலாகி விட்டது. மற்றும்படி, அவர்களின் நல்லநோக்கத்திற்கு குறுக்கே புகுவது தமிழ்பக்கத்தின் நோக்கமல்ல.

அந்த கடிதத்தில் 9 பேர் கையெழுத்திட்ட போதும், அதில் ஒருவரின் தடுமாற்றமே கடிதத்தை அனுப்ப முடியாத சூழலை தோற்றுவித்திருந்தது என்கிறார் சம்பந்தப்பட்ட ஒருவர்.

இந்த சம்பவத்தையொட்டி, ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கிடைத்த தகவல்களின்படி-

அப்படி தடுமாறியவர்- அம்பாறையை சேர்ந்த தேசியப்பட்டியல் எம்.பி, த.கலையரசன்.

9 பேரின் கையொப்பங்களை வெளியிட்ட போதே, த.கலையரசன் “தேசியப்பட்டியல் எம்.பிகளிற்குரிய நெருக்கடிகளை சந்தித்தார்“ என குறிப்பிட்டிருந்தோம். விபரமாக அப்போது சொல்லவில்லை. இப்பொழுதும் விபரமாக சொல்லாவிட்டாலும், சில விடயங்களை குறிப்பிடுகிறோம்.

கடந்த 6ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இந்த கடித முயற்சி, கடந்த மாத இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கடித முயற்சியை ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அது பற்றி தமிழ்பக்கத்துடனும் சில விடயங்களை பேசியிருந்தார்.

அந்த கடித முயற்சி ஆரம்பிக்கப்பட்ட போதே, தேசியப்பட்டியல் எம்.பி த.கலையரசனிடமும் கையொப்பம் வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது. கலையரசனிடம் நாடாளுமன்ற அமர்வில் கையெழுத்து வாங்குவது என்றும், அவரிடம் கையெழுத்து வாங்குவதற்கு முன்னர் செய்தி வெளியாகினால், கையெழுத்திடக் கூடாது என எம்.ஏ.சுமந்திரன் தரப்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டு விடும், தேசியப்பட்டியல் எம்.பியான த.கலையரசன் அதை மீற மாட்டார் என ஏற்பாட்டாளர்கள் கருதியிருந்தனர்.

இதனாலேயே, அந்த கடிதம் அனுப்பப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

6ஆம் திகதிக்கு பின்னர் கையொப்பங்கள் பெறப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் திட்டம் திடீரென உருவானது. அனைத்தும் 7ஆம் திகதி மாலையில் நிறைவுபெற்று விட்டது.

7ஆம் திகதி மாலை அந்த செய்தியை தமிழ்பக்கம் வெளியிட்டது. அதை தொடர்ந்து பல ஊடகங்கள் பரபரப்பாகி, அது பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்படியொரு ஊடகவியலாளர் எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொண்டார். அப்போது எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்திற்குள் இருந்தார். புதிய கடித விவாகரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறி, அருகிலிருந்த கலையரசனிடம் கையொப்பமிட்டீர்களா என வினவியுள்ளார்.

த.கலையரசன் எம்.பி, கையொப்பமிட்டதை மறுத்து விட்டார்.

கையொப்பமிட்டதை எம்.ஏ.சுமந்தினிடம் மறுத்து விட்டு, கடிதத்தை அனுப்பும்படி ஏற்பாட்டாளர்களிடம் கூற முடியாதே. இதையடுத்தே, கடிதத்தில் இட்ட கையெழுத்தை விலக்கிக் கொள்ளும்படி த.கலையரசன் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்தே, கடிதத்தை அனுப்பாமலிருக்கும் தீர்மானத்திற்கு ஏற்பாட்டாளர்கள் வந்தனர்.

ஒருவேளை, தமிழ்பக்கத்தின் செய்தி சற்று தாமதித்திருந்தால் அந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கக்கூடும். அந்த சங்கடம் எமக்குமுண்டுதான். ஆனால் அதை மீறியும் ஒரு கேள்வியுண்டு.

தேவையான- துணிவான முயற்சியொன்றில் ஈடுபட்டவர்கள், ஏனோ தமது கையெழுத்துக்களை உரிமைகோர தயங்கியவர்கள், கடிதத்தை அனுப்பி விட்டு கையெழுத்தை உரிமைகோர தயங்கியிருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது?. அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், ஆகப்பெரிய அவப்பெயருக்கு தமிழ் தரப்பு உள்ளாகியிருக்காதா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Related posts

இந்தியா நடுநிலை வகித்தாலும் தீர்மானத்தினூடாக ஆக்கப்பூர்வமான பணி செய்துள்ளது: தமிழ் அரசின் தலைவர் மாவை!

Pagetamil

நாடாளுமன்ற ‘சம்பவங்களை’ விசாரிக்க குழு!

Pagetamil

உலகின் கவனத்தை ஈர்த்த ஒற்றைக் கையால் தூக்கப்பட்ட ஆப்கான் குழந்தை: நலமாயிருப்பதாக அமெரிக்கா விளக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!