வியட்நாமில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி பிறருக்கு வைரஸ் பரவ காரணமாக இருந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்திய நாடுகளில் வியட்நாமும் ஒன்று. வியட்நாமில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
வியட்நாமின் க மைவ் நகரை சேர்ந்த லி வென் டிரி என்ற 28 வயது நிரம்பிய நபர் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதியை மீறி ஹோ ஷி மின்ஹீ நகருக்கு சென்றுள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த லி வென் டிரி தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பயணம் செய்ததால் அவர் மூலம் 8 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதில் ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, லி வென் டிரி மீது கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில் லி வென் டிரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால், கொரோனா தடுப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக லி வென் டிரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.




