அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிழப்புக்குப் பருவநிலை மாற்றமும் பழைய கட்டமைப்புமே காரணங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியைத் தாக்கியுள்ள இடா சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, குறைந்தது 47ஐ எட்டியுள்ளது.
திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலை ஒரு புதிய சவால் என்று நியூயோர்க் நகர மேயர் பில் டி பிலேசியோ தெரிவித்துள்ளார்.
மழைநீர் ரயில் தடங்களுக்குள் புகுந்ததால் ரயில் சேவைகள் தடைப்பட்டன. கீழ்த்தள வீடுகளில் வசிப்பவர்கள் சிலர் நீரில் மூழ்கியிருக்கக்கூடும்.
திடீர் வெள்ளம், தயார்நிலையில் இல்லாதது, அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப புதுப்பிக்கப்படாத பழைய கட்டடங்களின் பலவீனம் போன்றவையால் பாதிப்புகள் மேலும் பெருமளவில் இருந்ததாக நம்பப்படுகிறது.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், புதிய பாலங்கள் போன்றவற்றைக் கட்டயமைக்க பெருமளவில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் பாதாளச் சாக்கடை போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை அமைப்பதில் குறைவான நிதி செலவிடப்படுவதாகக் குறைகூறப்படுகிறது.