ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபியை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது வீட்டுக்கு சென்று தேனீர் அருந்தி விட்டு, அவரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
காபூலுக்கு வடக்கே 100 கிலோமீட்டர் (தொலைவில் பாகுலான் மாகாணத்தின் ஒரு பகுதியான அந்தராபி பள்ளத்தாக்கில் நடந்துள்ளது.
இந்த பகுதி தலிபான் எதிர்ப்பாளர்களின் பிடியில் இருந்த நிலையில், சில நாட்களின் முன்னரே தலிபான்கள் அந்த பகுதியை கைப்பற்றினர்.
நாட்டுப்புற பாடகர் அந்தராபியின் வீட்டிற்கு ஏற்கனவே ஒரு முறை தலிபான்கள் சென்று தேடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் சென்ற தலிபான்கள், இசைக்கலைஞரான தனது தந்தையுடன் தேநீர் அருந்திய பின்னர் சுட்டுக் கொன்றதாக அவரது மகன் ஜவாத் அந்தராபி AP க்கு கூறினார்.
தேனீர் அருந்திய பின்னர், அவரை வீட்டில் இருந்து வெளியே தரதரவென இழுத்துக் கொண்டுப்போய் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
“அவர் அப்பாவி, ஒரு பாடகர் மட்டுமே. மக்களை மகிழ்வித்தார்” என்று அவரது மகன் கூறினார்.
தனது தந்தையின் கொலைக்கு நீதி வேண்டும் என்றும், உள்ளூர் தலிபான் சபை கொலையாளியை தண்டிப்பதாக உறுதியளித்ததாகவும் கூறினார்.
இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படும். கொலை தொடர்பாக தற்போது வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை’ என கூறியுள்ளார்.
அந்ராபி ஜிச்சக் வாத்தியம் இசைத்தபடி நாட்டுப்புற பாடல்களை பாடி வந்தார்.
ஐக்கிய நாடுகளின் கலாச்சார உரிமைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னூன், ட்விட்டரில் அந்தராபியின் கொலை குறித்து “மிகுந்த கவலை” கொண்டிருந்ததாக எழுதினார்.
ஆம்னஸ்டி இன்டர்நஷனலின் பொதுச்செயலாளர் ஆக்னஸ் கல்லாமார்ட், கொலைக்கு கண்டனம் தெரிவித்தார்.