26.6 C
Jaffna
December 6, 2021
இந்தியா

கொடநாடு வழக்கு: ஆதாரங்களை திரட்டும் போலீசார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அவர்களை அங்கிருந்த காவலாளி ஒம்பகதூர் தடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் காவலாளியை தாக்கி கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த அவரது நண்பர் சயான் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை தேடினர். இந்த சமயத்தில் சேலத்தில் நடந்த விபத்தில் கனகராஜ் இறந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்களில் 8 பேர் ஜாமீனிலும், சயான், மனோஜ் நிபந்ததை ஜாமீனில் ஊட்டியிலும் தங்கியுள்ளனர்.

இந்த வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும், பல முக்கிய தகவல்களை கூற இருப்பதாகவும் சயான் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது. மேலும் போலீசார் இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை பெற வேண்டி உள்ளதாகவும் கோர்ட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சயானுக்கு கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று சயான் ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணை முடிந்ததும், சயானை மீண்டும் தாங்கள் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

சயான் தனது வாக்குமூலத்தில், சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரின் உத்தரவின்படி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் மர வேலை பார்த்த ஒருவரின் உதவியுடன் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கடத்தி ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜிடம் ஒப்படைத்து விட்டதாகவும், கூடலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாலும், எஸ்டேட்டில் கணிப்பொறி உதவியாளராக வேலை பார்த்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாலும், தனது மனைவி மற்றும் குழந்தை கார் விபத்தில் இறந்ததாலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது. அதன் காரணமாகவே இதுவரை முக்கிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும், தனக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தால் இந்த வழக்கில் உள்ள அனைத்து விவரங்களையும் கூற தான் தயாராக இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சயான், முக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களின் பெயர்களை தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவர்களுக்கும், இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது, இவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அதில் அந்த பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் கூறும் தகவல்களையும், சயான் சொல்லிய தகவல்களையும் ஆராய்ந்து அதன்பின்னர் அதனை அறிக்கையாக கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கியுள்ளதுடன், ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பாகிஸ்தான் ரி20 வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு: இந்தியாவிற்கு எதிராக கோசமிட்ட 6 பேர் கைது

Pagetamil

லக்கிம்பூர் கலவரம்; உயிரிழந்த விவசாயிகள், பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: சத்தீஸ்கர், பஞ்சாப் அரசு அறிவிப்பு

Pagetamil

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!