தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தக்காலத்திலும் தமக்கு தொடர்பு இருந்ததில்லையென தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனை தெரிவித்தார்.
“தலிபான் ஒரு சுதந்திர விடுதலைப் படை. தமிழ் புலிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும், இது கடந்த 20 ஆண்டுகளாக நமது நாட்டின்-ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது, ”என்று ஷாஹீன் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். முன்னாள் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர் உள்ளிட்டவர்களிற்கு பொதுமன்னிப்பளிப்பதாகவும், தம்மைக் கண்டு யாரும் அச்சமடைய தேவையில்லையென்றும் நேற்று அறிவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் மார்ச், 2001 ல் அழிக்கப்பட்டது. பழங்கால மணற்கல் சிற்பங்களை அழித்ததை இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் அப்போது கண்டித்தன. தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிது, ஆப்கானில் உள்ள தொன்மையான பௌத்த அடையாளங்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.
இருப்பினும், தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த சின்னங்கள் ஆபத்தை எதிர்கொள்ளாது என்று ஷாஹீன் வலியுறுத்தினார். “ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த அடையாளங்களிற்கு எந்த ஆபத்தில் இல்லை, இது தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என்றும் அவர் கூறினார். “உங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய உங்கள் முன்னோர்களைப் போல் நாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள். ஆனால் நாங்கள் விஷம பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ”என்று ஷாஹீன் கூறினார்.