சென்னை கோட்டையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். அதன் பிறகு சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு விருதுகளை வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு மிகு பேராசிரியர் லட்சுமணனுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பேராசிரியர் லட்சுமணன் தனி ஒரு மனிதனாக இளம் ஆராய்ச்சியாளர்களை கொண்ட உலக தரத்திலான நேரற்ற இயக்கவியலுக்கான ஆராய்ச்சி குழுவை உருவாக்கி வளர்த்துள்ளார். இவர் அறிவியல் ஆராய்ச்சி மீது கொண்ட தனது ஒருமனதான உழைப்பால் அவர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் தங்களது ஆராய்ச்சியினாலும், இதர உழைப்பாலும் அறிவியல் ஆராய்ச்சியில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து பல தலைமுறை இளைஞர்களுக்கு ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார். இதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மதுரை அனுப்பானடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி கொரோனாவால் மறைந்த டாக்டர் சண்முகப்பிரியாவின் சேவையை பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கொரோனா நோய் பரவலின்போது மருத்துவ பணியில் முன்மாதிரியாகவும், அர்ப்பணிப்புடனும் துணிவு மற்றும் தைரியத்துடனும் மருத்துவ சேவை செய்துள்ளார். கொரோனா 2-வது அலையில் 582 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்று 10 ஆயிரத்து 961 நபர்களிடம் கொரோனா பரிசோதனை எடுக்கும் பணி மேற்கொண்டார்.
இந்த முகாம்களின் மூலமாக 302 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் வீடுகளில் தனிமையில் இருந்த 52 கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்தார். இந்த நிலையில் டாக்டர் சண்முகப்பிரியாவுக்கு கடந்த மே மாதம் 10-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
மறைந்த டாக்டர் சண்முகப்பிரியாவின் தீரமான, துணிவான மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக 2021-ம் ஆண்டுக்கான துணிவு மற்றும் வீர சாகச செயல் திறனுக்கான கல்பனா சாவ்லா விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது கணவர் சண்முக பெருமானிடம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்- அமைச்சரின் நல் ஆளுமை விருது 3 பேருக்கு வழங்கப்பட்டது.
1. கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் நாராயணசாமி, 2. மாநில கல்லூரி பேராசிரியர் ராவணன், 3.சேப்பாக்கம் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
பேராசிரியர் நாராயணசாமி கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நிலையத்தை இரண்டு வார காலத்தில் முழு நேர கொரோனா நோயாளிகள் சிறந்த மருத்துவமனையாக மாற்றி அமைத்தார். அங்கு 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் முதல்- அமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. டாக்டர் ராவணன், காது கேளாத, வாய் பேச இயலாத, பார்வை திறனற்ற மாணவர்களின் கல்வி தரம் மேம்பட சிறப்பு முயற்சி மேற்கொண்டதற்கு விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த பார்த்திபன் நில எடுப்புக்காக முறையை மின் தொகுப்பினால் எளிமையாக நில எடுப்பாக இழப்பீட்டில் வெளிப்படை தன்மையை கொண்டு வந்தது மற்றும் நில மாற்றம் தொடர்பாக நடவடிக்கைகளை எளிமை படுத்தியதற்காக விருது கிடைத்தது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகசிறப்பாக சேவை புரிந்த திருச்சி புத்தூரில் உள்ள ஹோலிகிராஸ் சர்வீஸ் தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இவர்கள் பயிற்சி வழங்கி உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய சேலம் அழகாபுரத்தை சேர்ந்த டாக்டர் பத்மபிரியாவுக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. இவர் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 653 முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச மருத்துவ சிகிச்சை செய்தவர். கொரோனா தொற்று காலத்தில் மாற்று திறனாளிகளுக்காக சிறந்த சேவை செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி பழவூரை சேர்ந்த மரிய ஆலாசியஸ் நவமணியும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியதால் அவருக்கும் விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்கிய சென்னை அய்யப்பன் தாங்கலில் வீ.ஆர்.யுவர்லாய்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வங்கிக்கும் விருது வழங்கப்பட்டது. சமூக நலத்துக்காக மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகளில் அவ்வையார் விருது ஈரோடு டாக்டர் சாந்தி துரைசாமிக்கு வழங்கப்பட்டது.
44 ஆண்டுகளாக சக்தி மசாலா சமையல் பொடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வரும் இவர்கள் பல்வேறு சமூக நலன் சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சாந்தி துரைசாமி பெண்களுக்காக சிறந்த முறையில் தொண்டாற்றி வருவதை கவுரவிக்கும் வகையில் 2021-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அவ்வையார் விருது வழங்கப்பட்டது.
திருநங்கை கிரேஸ் பானுவுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மூன்றாம் பாலினம் விருது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டது. திருநங்கையர்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் இவரின் சேவையை பாராட்டி தமிழக அரசின் சிறந்த மூன்றாம் பாலினர் விருது வழங்கப்பட்டது. சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்காக முதல்- அமைச்சர் விருதுகள் இந்த ஆண்டு கீழ்கண்ட உள்ளாட்சிகளுக்கு கிடைத்தது. சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலை மற்றும் விருதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த நகராட்சியில் முதல் பரிசு ஊட்டி (ரூ.15 லட்சம்), 2-ம் பரிசு திருச்செங்கோடு (ரூ.10 லட்சம்), 3-ம் பரிசு சின்னமன்னூர் (ரூ.5 லட்சம்) ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சிகளில் முதல் பரிசு திருச்சி மாவட்டம் கள்ளக்குடி (ரூ.10 லட்சம்), 2-ம் பரிசு கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் (ரூ.5 லட்சம்), 3-ம் பரிசு சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் (ரூ.3 லட்சம்) ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
முதல்- அமைச்சரின் மாநில இளைஞர் விருது இந்த ஆண்டு ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த அரவிந்த்ஜெயபால், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பசுருதீன், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோருக்கும் பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமலா ஜெனிபர் ஜெயராணி, சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சிறப்பாக செயல்பட்ட சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், கடலூர் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்கும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள அரசு சமூக சுகாதார நிலையத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
கொரோனா காலத்தில் 6 துறைகளை சேர்ந்த 33முன்களப் பணியாளர்களுக்கு மிக சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் தங்கமுலாம் பூசிய பதக்கம்- சான்றிதழ் ஆகியவற்றை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் மருத்துவ துறையில் 9 பேருக்கும், காவல் துறையில் 3 பேருக்கும், நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறையில் 6 பேருக்கும், தீயணைப்பு துறையில் 3 பேருக்கும், வருவாய் துறையில் 3 பேருக்கும், கூட்டுறவு உணவு பாதுகாப்பு துறையில் 3 பேருக்கும், ஊரக வளர்ச்சி துறையில் 6 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற அனைவரும் முதல்- அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விருது பெற்ற அனைவரும் முதல்- அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல் கொரோனா தடுப்பு வீரர்களும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரான சங்கரய்யாவுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த ‘தகைசால் தமிழர் விருதை’ குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரடியாக சென்று வழங்கினார்.
விருது பெற்ற சங்கரய்யாவுக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். அந்த தொகையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு திரட்டி வரும் முதல்- அமைச்சரின் நிவாரண நிதிக்கு மு.க.ஸ்டாலினிடம் சங்கரய்யா வழங்கினார். கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் இந்த தகவல் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.