‘தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய நிபந்தனைகளை ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் நிறைவேற்றியுள்ளது’ என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் மறுத்தது. மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டது.
சட்ட விதிகளை பின்பற்றாத டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் சேதன் சர்மா, ”குறைதீர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்து தகவல் தொழில்நுட்ப சட்ட நிபந்தனைகளை டுவிட்டர் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது,” என்றார். அதைத் தொடர்ந்து, இதை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.