அம்பாறை, கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் வகைதொகையில்லாமல் மணல் அகழப்பட்டு, கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெருமெடுப்பில் மணல் அகழப்பட்டு வருகிறது. சுமார் 15- 20 உழவு இயந்திரங்கள் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியிலிருந்து மணலை அள்ளிவந்து காஞ்சிரங்குடா பகுதியில் களஞ்சிப்படுத்துகின்றன. பகல் முழுவதும் ஓயாமல் இந்த பணி நடக்கிறது.
இதற்காக காட்டுக்குள் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
காஞ்சிரங்குடாவிலிருந்து டிப்பர் வாகனங்களில் மணல் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பிரதேச மக்கள் அனைத்து அரச நிர்வாக அலகுகளிற்கும் தெரியப்படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள். எனினும், யாரும் அதில் தலையிடவில்லை.
இதனால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் உருவாகியுள்ளது.
யாருடைய பின்னணியில் இந்த இயற்கை அழிப்பு நடைபெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.



