யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெல்டா திரிபு இனம்காணப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்து வருகிறார்கள். வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்து, அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒட்சிசன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பகுதிகளில் அண்மைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், யாழ் மாவட்டத்தின் பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பெறப்பட்ட மாதிரிகள் சில, வைரஸின் மரபணு பரிசோதனைக்காக சிறிஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதில் பருத்தித்துறையிலிருந்து அனுப்பப்பட்ட மாதிரியொன்று டெல்டா திரிபு என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
பருத்தித்துறையில் அண்மை நாட்களாக ஆலய திருவிழாக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்று வருவது தெரிய வந்துள்ளது. மக்கள் சுகாதார விதிமுறைகளை பேணுவதும், தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்ப்பதும் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும். எனவே, ஆலய நிர்வாகங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்மென கோரப்பட்டுள்ளது.




