சீஷெல்ஸ் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இலங்கை கொடியுடனான கப்பலின் கப்டனுக்கு 167,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீஷெல்ஸ் உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இந்த தீர்ப்பளித்தது.
மகாலிங்கம் கணபதி (32) என்பவரே தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சீஷெல்ஸ் மீன்வள சட்டத்தின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டார்.
32 வயதான இவர், ஜூன் 1 ம் திகதி, சம்பத் 7 என்ற மீன்பிடி படகுடன் கைதானார். சீஷெல்ஸ் கடலில் மீன்பிடிக்க உரிமம் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட குற்ச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதி, ரோனி கோவிந்தன், மீன்பிடி கப்பல் உரிமம் இல்லாமல் மீன்பிடித்தல் குற்றங்களை செய்ததற்காக 167,000 அமெரிக்க டொலர் (33383233.20இலங்கை ரூபா) அபராதம் விதித்தார். 4 நாட்களுக்குள் இந்த அபராதத்தை செலுத்த தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மீன்பிடிச் சட்டத்தின் பிரிவு 70 -ன் படி, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படும் கப்பலில் காணப்பட்ட எந்தப் பகுதியும் சீஷெல்ஸ் குடியரசிற்கு உடைமையாக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஓகஸ்ட் 18 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படும், அதுவரை குற்றவாளி தீவு நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைக்கு எதிராக 30 வேலை நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு உரிமை உண்டு.