மீன் குழம்பு வைத்ததில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியதில் இறந்து விட்டதாக எண்ணி கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி துர்கா வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மோகன், ஜீவா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு, குமார் தனது வேலையை முடித்து விட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, குமாருக்கு மனைவி துர்கா மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார்.
மனைவியிடம் இன்று ஆடி கிருத்திகை நாளாக இருந்தும் ஏன் மீன் குழம்பு வைத்தாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து மகன்கள் இருவரும் அருகில் உள்ள துர்காவின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், இரவு 10 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.
அப்போது, தனது தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததையும், தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன்கள் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, இறந்துவிட்டதாக நினைத்து பயந்து போன குமார், தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து கொரட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.