சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தைத் தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தனது அடுத்தகட்ட படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
ராம் இயக்கத்தில், கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பாக மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது. பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் கலந்து கொண்டு இந்த படம், விமர்சனரீதியாகவும் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. பேரன்பு படத்துக்குப் பிறகு படம் எதுவும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார் ராம். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் ராம்.
இந்நிலையில் தனது அடுத்த படத்தின் வேளைகளில் இறங்கியுள்ளார் இயக்குனர் ராம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்தப்படம் உருவாக உள்ளது. ராமின் முந்தைய படங்களை இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.