சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டாரவிற்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த, நீதிபதிகள் நிசங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அபேரத்ன மற்றும் டி.என்.சமரகோன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிபதிகள் குழாம் தடை உத்தரவை பிறப்பித்தது.
அத்துடன், செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன, அதன் உறுப்பினர்கள் தயா சந்திரசிறி ஜயதிலக, சந்திர பெர்னாண்டோ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.