ஷிகர் தவண் தலைமையிலான சுற்றுலா இந்திய அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இன்று நடைபெற இருந்த இலங்கை அணிக்கு எதிரான 2வது ரி20 ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி தலா 3 ஒருநாள் ரி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, ரி20 தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2வது ரி20 ஆட்டம் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு வழக்கமாக எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் குர்னல் பாண்டியாவுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. அதில் நெகட்டிவ் வந்தால், 2வது ஒருநாள் ரி20 ஆட்டம் அடுத்து நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். ஆதலால், இன்று நடக்க இருந்த 2வது ரி20 ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணி வீரர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால், 2வது ரி20 ஆட்டம் நாளை நடக்கலாம்.
இதற்கிடையே இலங்கையிலிருந்து பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இருவரும் இங்கிலாந்து சென்று இந்திய அணியில் இணைய உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் அணியில் உள்ள வீரர்கள் தனிமையில் இருப்பதால், இங்கிலாந்து சென்று இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படலாம்.