கிளிநொச்சி பூநகரி கோட்டத்திற்குட்பட்ட இரணைத்தீவு பாடசாலையினை புனரமைக்கும் பொருட்டு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற குழுவினரை கடற்படை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இரணைத்தீவு மக்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இரணைமாதா நகரில் வசித்து வந்தனர். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2018 இல் 366 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் இரணைத்தீவில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட மக்கள் அன்று தொடக்கம் பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்குள்ள இரணைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையினை
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி 7.4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டு 14.07.2021 இல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12.10.2021 இல் நிறைவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இன்றைய தினம் (16) குறித்த பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிமனையின் தொழிநுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட குழுவினர் இரணைத்தீவுக்கு செல்வதற்காக இரணைமாதாநகர் கடற்கரைக்குச் சென்ற போது அங்கிருந்த கடற்படையினர் அவர்களை செல்வதற்கான அனுமதியினை மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
MOD அனுமதியின்றி இரணைத்தீவுக்கு அனுமதிக்க முடியாது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் சுமார் 150 குடும்பங்கள் வரை இரணைத்தீவில் வசித்து வருகின்றனர். ஏனைய மக்களும் மீள குடியேறுவதற்கு பாடசாலை மிக
மிக முக்கியமானது என்பதனால் சேதமுற்றுள்ள பாடசாலையினை புனரமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கே கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர் என பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.