உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அவ்வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 825 தலைவர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வேட்பு மனு தாக்கலின்போது பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது.
லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த மோதலின்போது ஒரு பெண் தாக்கப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளருடன் சென்ற அந்த பெண்ணை, இரண்டு நபர்கள் தாக்கி அவரது புடவையை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மொத்தம் 14 இடங்களில் வன்முறை நடந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.