முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் தென்பகுதியிலிருந்து வந்து தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களால் மாவட்டத்திற்கு சுகாதார அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியிடங்களிலிருந்து வந்து நாயாறு மீன்பிடி பகுதியில் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும், ஒத்துழைக்கவும் மறுத்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தென்பகுதியை சேர்ந்த பலர் அங்கு மீன்பிடிக்க முகாமிட்டுள்ளனர். சிறுவர், பெண்கள் என 700 பேர் வரையானவர்கள் அங்கு நெருக்கமாக குடியிருக்கிறார்கள்.
கடந்த 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதையடுத்து அங்கிருந்த மற்றவர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கையெடுத்தனர். எனினும், அங்கிருந்தவர்கள் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை. பலர் முரண்பட்டனர்.
அத்துடன், கடந்த 30ஆம் திகதி அங்கிருந்த சிலர் பேருந்து மூலம்- சுகாதார விதிமுறையை மீறி, மாகாண எல்லை கடந்து, புத்தளம் கருக்குப்பனை என்ற இடத்திற்கு சென்றனர். அந்த பகுதி அபாய வலயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் நோய்க்காவிகளாக திரும்பி வருவதை தடுக்கவும், நாயாறில் தங்கியிருப்பவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளவும் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தென்பகுதியிலிருந்து வந்து அங்கு தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரம் எந்த தரப்பிடமும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.




