இந்தியாவில் முதல் முறையாக 5 குணமடைந்த கொவிட் நோயாளிகளுக்கு மலக்குடல் இரத்தப்போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனையில், குணமடைந்த 5 கொவிட் -19 நோயாளிகளுக்கு மலக்குடல் இரத்தப்போக்கு (Cytomegalovirus-related rectal bleeding) ஏற்பட்டுள்ளது.
ஐந்து நோயாளிகளில் ஒருவர் “பாரிய இரத்தப்போக்கு” மற்றும் “கடுமையான” COVID-19 தொடர்பான மார்பு நோய் காரணமாக இறந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த நோயானது இதுவரை, நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் புற்றுநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே காணப்பட்டதாகவும், சாதாரண நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு மலக்குடல் இரத்தப்போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் குறைந்தது 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, பிறகு குணமடைந்தவர்கள் என ‘கங்கா ராம்’ மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் 30 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இந்த நோயாளிகள் அனைவரும் வயிற்று வலி மற்றும் மல வெளியேற்றத்தின் போது இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையை நாடியவர்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.