டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி நீச்சல் வீரர் தேர்வில் நடைபெற்ற மோசடி குறித்து இந்திய நீச்சல் வீரர் எஸ் பி லிகித் வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் வீரர்களை தேர்வு செய்யும் பணியை ஃபினா என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த தேர்வு உஸ்பெகிஸ்தானில் நடந்த ஒபன் நீச்சல் சாம்பியன் ஷிப் போட்டி மூலம் நடந்தது. இந்த போட்டியில் இந்திய நீச்சல் வீரர் எஸ் பி லிகித் கலந்து கொண்டார்.
இந்த போட்டிகளில் உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக வீரர்கள் நீச்சல் அடித்த நேரம் மாற்றப்பட்டதாக லிகித் தெரிவித்தார். இதை இந்திய நீச்சல் சம்மேளன செயலர் மோனல் சோக்சியும் ஆமோதித்தார். மேலும் ஃபினா அமைப்பு இந்த புகார் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த புகார் காரணமாக ஃபினா நடத்திய தேர்வைச் செல்லாததாக அறிவிக்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் லிகித் செய்தியாளர்களிடம், “இது குறித்து நான் அமைப்பாளர்களிடம் புகார் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் எனக்கு மனநிலை சரி இல்லை எனவும் காது சரியாகக் கேட்காது எனவும் சொல்லுமாறு வற்புறுத்தினர். மேலும் இந்த வழக்கம் 2000ஆம் ஆண்டில் இருந்தே நடைபெறுவதாகவும் அவசியம் 10 உஸ்பெகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுக் குழுவினர் கூறி உள்ளனர்.
இது குறித்து மேலும் நான் கேள்விகள் எழுப்பிய போது இவை எல்லாம் உள்நாட்டு அரசியல் எனவும் இதில் தலையிட வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் இது குறித்து நான் எதுவும் பேசாமல் இருக்க எனக்குப் பணம் அளிப்பதாகவும் தெரிவித்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு என்னால் நீச்சல் அடிக்க முடியாத நிலையில் இருப்பதாக எழுதிக் கொடுக்க சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.