இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி முதன்முறையாக பிரபல இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்துள்ளார்.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன.
இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ‘கோடியில் ஒருவன்’ படத்திலும் நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. அரசியல் திரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘ஸ்லம் ஆந்தம்’ என்கிற பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது. இந்தப்பாடலை இயக்குனர் கௌதம் மேனன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரேம்ஜி, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் முதன்முறையாக இணைந்து பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரம்ஸ் சிவமணியும் இந்த பாடலில் பணியாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.