ரசிகர்களை கவர முன்னணி தொலைக்காட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதற்காக பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்காக தொலைக்காட்சிகள் போட்டி போட்டு நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டங்களை காட்டி வருகின்றன. நம்மூர் தொலைக்காட்சிகள் தற்போது உலக தரத்திற்கு நிகழ்ச்சிகளை வழங்க தயாராகிவிட்டன. அதேபோன்று புதிய நிகழ்ச்சிகளை விரைவாக பிரபலப்படுத்த சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோ, ஹீரோயின்களை களமிறக்குகின்றனர்.
தற்போது சூப்பர் நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறது. சூப்பர் ஹிட்டடித்துள்ள இந்நிகழ்ச்சிக்கு போட்டியாக பிரபல தொலைக்காட்சியான சன் டிவியும் புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பரப்ப உள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியை தான் சன் டிவி இந்தியாவுக்கு முதல் முறையாக கொண்டு வந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக 45க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமாக உருவாகும் இந்நிகழ்ச்சியை சன் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். அவர் தொகுத்து வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி ஹெலிகாப்டரிலிருந்து மாஸாக வந்திருங்கும் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகியிட்டுள்ளது சன் டிவி. இதேபோன்று தெலுங்கில் நடிகை தமன்னாவும், கன்னத்தில் நடிகர் சுதீப்பும் தொகுத்து வழங்கவுள்ளனர். இந்நிலையில் தெலுங்கில் ஜெமினி தொலைக்காட்சியில் ‘மாஸ்டர் செப்‘ நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளார் என்பது தெரிந்த விஷயம். இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதியுடன் தமன்னா புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியும், தமன்னாவும் ‘தர்மதுரை’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.