நமது நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக மீண்டும் பாரத் என்றே மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சர்ச்சை நாயகி என்னும் பெயருடன் வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்து கடும் எதிர்ப்புகளையும் சம்பாரித்துக் கொண்டார். இந்த நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது :- இந்தியா என்பது அடிமைப் பெயராக உள்ளது. இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். இந்தியாவின் பண்டைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதே, நமது நாகரீகத்தின் ஆன்மாவாக திகழ முடியும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள் மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.
ஆகவே, அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?. இந்தியா என்னும் பெயரை சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் நமக்கு கொடுத்தனர். இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? நமது குழந்தைகளுக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.