இராஜாங்க அமைச்சர ச.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடி, மன்ரசா வீதியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக நேற்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாப்பு அணியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீதிச்சண்டை
இந்த துப்பாக்கிச்சூடு ஏன் நடந்தது? அவர்களிற்குள் என்ன முன் பகை இருந்தது என ஆராய்ந்தால், சாதாரணமான விவகாரமொன்றே உயிர்ப்பலியில் முடிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மகாலிங்கம் பாலசுந்தரம், மணல் ஏற்றும் வாகன சாரதியாக பணிபுரிகிறார். 3 நாட்களின் முன்னர், மன்ரசா வீதியிலுள்ள பிறிதொரு வீட்டுக்கு மணல் கொண்டு வந்து பறித்துள்ளனர். லொறியை பாலேந்திரன் செலுத்தினார். அவருடன் இன்னொருவரும் வந்துள்ளார்.
அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் உத்தியோகத்தர், வீதியில் போதுமான இடமிருப்பதால் அந்த பக்கமாக போகுமாறு கூறியிருக்கிறார். இதன்போது, இருவருக்குமடையில் வார்த்தை தடித்துள்ளது.
அன்று அந்த பிரச்சனை முடிந்தது.
மணல் பறித்த வீட்டில் மீதி பணம் வாங்க வேண்டியிருந்ததால், தனது நண்பர் ஒருவருடன் பாலசுந்தரம் முச்சக்கர வண்டியில் அங்கு சென்றுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போது, அன்று வாகன விவகாரத்தில் முரண்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், அமைச்சரின் வீட்டு வாசலில் சிவில் உடையில் நின்றுள்ளார்.
இதை அவதானித்த பாலசுந்தரம், முச்சக்கர வண்டியில் சென்றபடியே, பொலிஸ் உத்தியோகத்தரை பார்த்து “கூ“அடித்து விட்டு சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், முச்சக்கர வண்டியில் சென்றவர்களை அழைத்துள்ளார்.
முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற, பாலசுந்தரத்தின் நண்பரான விஜயராஜா சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த போது,
“நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் -சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்பாதுகாவலர் நின்றிருந்தார்.. இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினான். நான் நிறுத்தாமல் சென்றேன்
இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ அவர் கூப்பிடுகின்றார் கதைத்துவிட்டு போவோம் என்றார் அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிகொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர் நண்பனிடம்-“ என்னடா கைகாட்டிச் சென்றனீ“ என கேட்டார்.
அதற்கு நண்பன் “இதைக் கேட்க நீ யார்“ என்றார்.
அப்போது மெய்பாதுகாவலர் நான் பொலிஸ் என கூற, இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது
இதனையடுத்து மெய்பாதுகாவலர், நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டு, “நான் யார் என்று தெரியுமா? பொலிஸ்் என துப்பாக்கியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது. நண்பன் கீழேவிழுந்தான். இரத்தம் வெளியேவந்தது. அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.
அதேவேளை நண்பன் முன்று தினங்களுக்கு முன்னர்மெய்பாதுகாவலர் உடன் பிரச்சனை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.
சுட்டதும் தூக்கிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்
பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியை எடுத்த வேகத்தில் சூடு நிகழ்ந்தது என்ற நண்பனின் வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தவறுதலாக நிகழ்ந்த சூடா? அல்லது, துப்பாக்கி சுடும் நிலையில் இருந்ததை மெய்ப்பாதுகாவலர் அறிந்திருக்கவில்லையா? அல்லது வேறெதும் காரணமா என்பது பொலிசாரின் விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்.
பாலசுந்தரத்தை நோக்கி துப்பாக்கியை நீட்ட, அது வெடித்து, பாலசுந்தரம் இரத்த வெள்ளத்தில் நிலத்தில் விழுந்ததும், அவரை தூக்கிக் கொண்டு, அதே முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு பொலிஸ் உத்தியோகத்தரும் சென்றார்.
எனினும், பாலசுந்தரம் உயிரிழந்து விட்டார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்..
துப்பாக்கிச்சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பை சேர்ந்தவரே. வவுணதீவு பகுதியை சேர்ந்தவர். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஞா.சிறிநேசன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரது மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டவர். பின்னர், அங்கிருந்து இடமாற்றம் பெற்று, வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வருகிறார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது, மட்டக்களப்பு நகரிலேயே குடியிருக்கிறார். அவரது மனைவி அரச உத்தியோகத்தர். அவர் அடுத்த வாரம் குழந்தை பேற்றை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
மிகச்சாதாரண விடயங்கள் எல்லாம், மனிதர்களின் நிதானமிழப்பினால் எவ்வளவு பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.