ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பின்னணி நடனக் கலைஞராக இருந்த ராகவா லாரன்ஸ் தனது கடின உழைப்பின் மூலம் நடன இயக்குனராக வளர்ச்சி பெற்றார். அதையடுத்து நடிகராகவும் களமிறங்கினார். பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர் என தற்போது தமிழ் சினிமாவின் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் வெற்றி கண்ட நடிகர்கள் தங்களது சகோதரர்களை அறிமுகப்படுத்துவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினை புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக்குகிறார்.
ஏற்கனவே ‘காஞ்சனா’ படத்தில் இன்ட்ரோ பாடலில் அவரை வரச் செய்து மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் லாரன்ஸ்.
இந்நிலையில் எல்வினின் பிறந்தநாளான இன்று அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். “எனது அருமை சகோதரருக்கு என்னுடைய சிறிய பிறந்தநாள் பரிசு” என்றும் தெரிவித்துள்ளார்.
எல்வின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை axess FIlm Factory தில்லி பாபு தயாரிக்கிறார். நடிகர் ராஜ்குமார் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு மாஸ் ஹீரோவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது