பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஜோகோவிச் சம்பியன்: 19வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை!

Date:

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் செர்பியா வீரர் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை பட்டியலில் இணைந்தார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 5ம் நிலை வீரர் சிட்சிபாசும் (கிரீஸ்) மோதினர். 13 முறை சம்பியனான நடாலை அரைஇறுதியில் விரட்டிய நம்பிக்கையுடன் களம் புகுந்த ஜோகோவிச்சை தொடக்கத்தில் சிட்சிபாஸ் தடுமாற வைத்தார். 72 நிமிடங்கள் போராடி முதல் செட்டை வென்ற சிட்சிபாஸ் 2வது செட்டையும் தனக்குரியதாக்கினார். இரு செட் பின்தங்கிய நிலையிலும் மனம் தளராத அனுபவ வீரர் ஜோகோவிச் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டி எழுச்சி பெற்றார். அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து கடைசி செட் மேலும் சூடுபிடித்தது. இதில் சிட்சிபாஸ் வெகுவாக குடைச்சல்கொடுத்த போதிலும் ஜோகோவிச்சின் கம்பீரமான வெற்றிப்பயணத்துக்கு அணை போட முடியவில்லை.

4 மணி 11 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த யுத்தத்தில் ஜோகோவிச் 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார்.

களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனை ஜோகோவிச் வெல்வது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2016ஆம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியுள்ளார். இதன் மூலம் கடந்த 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது இரண்டு முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற மகத்தான பெருமையை ஜோகோவிச் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் ரோய் எமர்சன் (அவுஸ்திரேலியா), ரோட் லாவர் (அவுஸ்திரேலியா) ஆகியோருக்கு பிறகு இச்சாதனையை ஜோகோவிச் செய்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச்சுக்கு இது 19வது (அவுஸ்திரேலிய ஓபன்-9, பிரெஞ்ச் ஓபன்-2, விம்பிள்டன்-5, அமெரிக்க ஓபன்-3) கிராண்ட்ஸ்லாம் மகுடம் ஆகும். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபெல் நடாலும் தலா 20 கிராண்ட்ஸ்லாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களை நெருங்கி விட்ட ஜோகோவிச், விம்பிள்டன் போட்டியின் போது அவர்களின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

கோப்பையை கையில் ஏந்திய 34 வயதான ஜோகோவிச்சுக்கு ரூ.12½ கோடியும், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.6¾ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

இரட்டையர் பிரிவிலும் அசத்திய கிரெஜ்சிகோவா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோப்பைக்கு முத்தமிட்ட செக்குடியரசு இளம் வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா இரட்டையர் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். அவரும் சக நாட்டவர் கேத்ரினா சினியாகோவாவும் இணைந்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக் (போலந்து)- ேமட்டெக் சான்ட்ஸ் (அமெரிக்கா) கூட்டணியை பதம்பார்த்து கோப்பையை சொந்தமாக்கினர். 2000ஆம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரு பிரிவிலும் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை 25 வயதான கிரெஜ்சிகோவா பெற்றார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்