கமல்ஹாசன் மற்றும் மீனா இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து அப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சைனீஸ் மொழியில் கூட இப்படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மற்ற மொழிகளிலும் இரண்டாம் பாகம் ரீமேக் ஆகி வருகிறது.
தமிழில் த்ரிஷ்யம் படம் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. த்ரிஷ்யம் 2 வெற்றியை அடுத்து பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் கௌதமி நடிக்கவில்லையாம். எனவே மலையாளம் மற்றும் தெலுங்கில் த்ரிஷ்யம் படங்களில் நடித்த மீனா பாபநாசம் 2-ம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.
கமல்- மீனா ஜோடி இருவரும் 1996-ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அத்தியாடுது 25 ஆண்டுகள் கழித்து பாபநாசம் படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து பாபநாசம் 2-ம் பாகத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.