கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் விடியல், வானவில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளின் ஊடாக கொரோனாப் பரவல் அதிகமாக ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதால் அவற்றை தற்காலிகமாக மூடுமாறு கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதேபோல கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் இரு வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்படிருந்தன.
இந்நிலையில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோருக்கும் ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றிருந்தது.
சந்திப்பின் போது ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிமாக மூடி, தொழிற்சாலைகளை தொற்றுநீக்கலுக்கு உட்படுத்தி தொழிலாளர்களை பரிசோதனைகளுக்கு முழுமையாக உட்படுத்தி சுகாதாரத் துறையினரின் சம்மதத்துடன் மீளத் திறப்பதற்கு உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஏற்கனவே கர்ப்பவதிகளுக்கு விசேட விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அது போலவே தற்போது ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுகின்ற நிலையிலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழமை போலவே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உரிமையாளர்கள் தமக்கு வாக்குறுதி வழங்கியதாகவும் வேழமாலிகதன் தெரிவித்தார்.