தனது பெயரில் துவங்கப்பட்ட போலியான ட்விட்டர் கணக்கை மின்னல் வேகத்தில் செயல்பட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் தடை செய்துள்ளதாக நடிகர் சார்லி தெரிவித்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் சார்லி தனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு துவங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சார்லி,
ட்விட்டர், முகநூல் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் தான் இதுவரை கணக்கு துவங்கவில்லை. தனது பெயரில் டுவிட்டரில் போலியான கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிந்து, பார்த்தபோது தான் எனக்கே தெரியும். என்னுடைய கணக்கு என நினைத்து பல்லாயிரக்கணக்கானோர் அந்த கணக்கை பின் தொடர்ந்து வாழ்த்தி வரவேற்றிருப்பது தெரியவந்தது.
மேலும், கடந்த 40 ஆண்டு காலமாக தனது துறை மட்டுமல்லாது தனது அன்பிற்குரிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அனைவரும் தன்னுடன் நேரடித் தொடர்பில்தான் இருந்து வருகிறார்கள். டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைதள கணக்குகளை தான் இதுவரை பயன்படுத்தும் அவசியம் வரவில்லை. தனது நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில் தன் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கை துவங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.
புகார் அளித்த உடனே சைபர் கிரைம் காவல் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது பெயரில் போலியாக துவங்கப்பட்ட டுவிட்டர் கணக்கை 30 நிமிடங்களில் தடை செய்து விட்டனர். அதற்காக சென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று நடிகர் சார்லி கூறினார்.