27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி தொற்றுநோய் வைத்தியசாலை ஊழல் குற்றச்சாட்டு: கணக்காய்வு அறிக்கையிலும் சில கேள்விகள்!

♦கணக்குப்புலி

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் பலகோடி ரூபா மோசடி நடந்திருப்பதை அண்மையில் ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட வடமாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் கணக்காய்வு அவதானிப்பு அறிக்கை (Audit Observation Report) வெளிக்காட்டியிருந்தது. தற்போது அந்த
அறிக்கையில் அடங்கியுள்ள கணக்காய்வு அவதானிப்புகள் குறித்த மாற்று அபிப்பிராயங்கள் மூத்த கணக்காளர்கள் மத்தியிலிருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொறுப்பு கூற வேண்டியவர்கள் அதிலிருந்து விடுவிக்கப்படும் நிலைமையேற்படுமென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில்
முக்கிய அவதானிப்புகளில் ஒன்று வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில்
சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவ வழங்கலுக்கான கேள்வி கோரல்
நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட விதிமீறல்கள் தொடர்பானது.

கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையில் “பிராந்திய பெறுகைகள் குழுவின் தலைவர்
(கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) 01.10.2020அன்று
தேசிய பெறுகைகள் முறையின் (National Procurment Method) கீழ் உணவு வழங்குனரைத் தெரிவு செய்வதற்கான பெறுகை நடைமுறைகளைத் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே அறிக்கை “அதனடிப்படையில் 02.10.2020 இல் பின்வரும் 05 நிறுவனங்களிற்குக் கேள்விப் பத்திரங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன”என்று விபரிக்கிறது. மேலும் “சுற்றுநிருபத்தின் பிரகாரம் தேசிய வாங்குதல் முறையில் ரூபா 100000.00 விஞ்சிய கொள்வனவுகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்களிடமிருந்து கூறுவிலை பெறுவதற்கான அனுமதி திணைக்களத் தலைவரிடம் பெறப்பட்டிருத்தல் வேண்டும்” எனக் குறிப்பிடுகிறது.

இந்த வாசகங்களே பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அறிய முடிகிறது.
அதற்கான காரணமாக விடயமறிந்தவர்கள் பின்வரும் ஆதாரங்களைக்
காட்டுகின்றார்கள்,

A. தற்போது வழக்கில் உள்ள 2006ஆம் ஆண்டின் தேசிய பெறுகைகள் கைநூல்
மற்றும் சுற்றறிக்கையின்படி தேசிய போட்டிப் பெறுகைகள் (National Competitive Bidding- NCB) மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட தேசிய போட்டிப் பெறுகைகள் (Limited National Competitive Bidding- LNCB) என இரண்டு வகை தேசிய பெறுகை முறைமைகளே உள்ளன.

B. மேற்படி கைநூல் மற்றும் சுற்றறிக்கைகளில் “வாங்குதல்”(shopping) எனப்படும் பெறுகை முறையும் (Procurement method) பெறுகைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது 2006ஆம் ஆண்டின் பெறுகைகள் கைநூலின்படி தேசிய பெறுகை முறைகளுக்குள் அடங்காது.

C. தேசிய போட்டிப் பெறுகை முறையினைப் பயன்படுத்தினால் ஆகக்குறைந்தது
ஒரு தேசிய பத்திரிகையிலும, பொருத்தமான இணையத்தளங்களிலும் கேள்வி கோரல்
அறிவித்தல்கள் பிரசுக்கப்படல் கட்டாயமானது. மேலும் இம் முறைமையின்கீழ்
கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்படும்போது தகுதிவாய்ந்த வழங்குனர்கள் தமது
கேள்வி விலைப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆகக் குறைந்தது 21நாட்கள்
அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

D. வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலைக்கான உணவுவழங்கலுக்குரிய கேள்வி
கோரலில் மேற்படி விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும்
கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையில் இல்லை. மாறாக, ‘கேள்விப்பத்திரங்கள்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் நேரடியாக 05 வழங்குனர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது’ எனவே குறிப்பிடப்படுகிறது.

E. மட்டுப்படுப்படுத்தப்பட்ட தேசிய போட்டிப் பெறுகை முறையானது அவரச
நிலைமைகளின்போது அல்லது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான வழங்குனர்களே
காணப்படும் சந்தர்ப்பங்களில் அல்லது தேசிய பத்திரிகை விளம்பரத்திற்காக
மேற்கொள்ளப்பட வேண்டிய செலவானது பெறவேண்டிய பொருள்/பண்டத்தினது
பெறுமதியினை விட மிக அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இதன்போது முன்னரே தெரிவுசெய்யப்பட்டுள்ள (பதிவு செய்யப்பட்ட) வழங்குனர்களுக்கு நேரடியாகக் கேள்வி மனுவானது வழங்கப்படும். மேலும் இம் முறைமையின்கீழ் கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்படும்போது தகுதிவாய்ந்த வழங்குனர்கள் தமது கேள்வி விலைப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆகக் குறைந்தது 14நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

F. வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலைக்கான உணவு  வழங்கலுக்குரிய கேள்வி
கோரலில் 14நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எவையும்
கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையில் இல்லை. மாறாக, கேள்விப்பத்திரங்கள்
02.10.2021அன்று வழங்கப்பட்டு 11.10.2021ஆம் திகதிக்கு (09தினங்களுக்குள்) முன்னரே வழங்குனர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

G. மேற்படி தேசிய போட்டிப் பெறுகை முறைகள் தவிர்ந்த “வாங்குதல்” என்று
ஒரு முறையும் (shopping method) பொருள்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படலாம் என 2006ஆம் ஆண்டின் தேசிய பெறுகைகள் கைநூல் மற்றும் சுற்றறிக்கைள் குறிப்பிடுகின்றன. இம் முறைமையானது உடனடியாக கடைகளில் பெறக்கூடிய, விலையில் குறைந்தனவாக உள்ள பொருட்களைப் பெறுவதற்கு அல்லது
5மில்லியனுக்கு மேற்படாத பண்டங்கள் கொள்வனவின் போது பயன்படுத்தப்படலாம்.
இம் முறையின் கீழ் முன்னரே பதிவு செய்யப்பட்ட ஐந்து வழங்குனர்களுக்கு
கேள்விப் பத்திரங்களை வழங்கி அவர்களில் மூவர் அப் கேள்வி விலைப்
பத்திரங்களைச் சமரப்பித்திருத்தல் போதுமானது. மேலும் இம் முறைமையின்கீழ்
கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்படும்போது தகுதிவாய்ந்த வழங்குனர்கள் தமது
கேள்வி விலைப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆகக் குறைந்தது 07நாட்கள்
அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

“வாங்குதல்” முறைமையின் (shopping method) கீழ் ஒவ்வொரு பெறுகைக்
குழுவும் மேற்கொள்ளக்கூடிய பெறுகைகளின் ஆகக் கூடிய பெறுமதி வரையறைகள்
காலத்திற்குக் காலம் தலைமை கணக்கு அலுவலரால் அறிவிக்கப்படும். இதற்கமைய
வடமாகாணசபையின் PF/06/2015 (II)இலக்கத்துடன் 30.04.2020அன்று
வெளியிடப்பட்ட மாகாண நிதிச் சுற்றிக்கையின் பிரகாரம் வாங்குதல் முறையின்
(shopping method) கீழ் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கு பிராந்திய பெறுகைக் குழுவிற்கான வரையறை 1மில்லியன் (10,00,000) ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. (கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையில் 100,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையில் 10,00,000ஆக இருத்தல் வேண்டும். அவ்வாறாயின் எவ்வாறு அத்தவறு அறிக்கையில் விடப்பட்டது என்பது தனிக் கவனத்திற்கு உரியது).

வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலைக்கான உணவு வழங்கலுக்குரிய கேள்வி கோரலில் கேள்விப் பத்திரங்களை வழங்கி விலைப் பத்திரங்களைப் பெறுவதில் மேற்படி
முறையே உபயோகிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையிலிருந்து ஊகிக்க முடிகிறது.

அதாவது, மேற்படி தரவுகளின் படி அனுமதி வழங்கப்பட்ட முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு முறையில் வழங்குனர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் வெளியாகியுள்ள கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையின் எவ்விடத்திலும் இது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரியவில்லை.

மேற்குறித்த விளக்கங்களில் இருந்து, வடமாகாணக் கணக்காய்வுத் திணக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையானது தேசிய போட்டிப் பெறுகை முறைகளையும் (NCB/LNCB method), “வாங்குதல்” முறையினையும் (Shopping Method) ஒன்றாகக் கருதியுள்ளதாக நாம் கொள்ள வேண்டியுள்ளது.

இருப்பினும் வடமாகாண கணக்காய்வு திணைக்களமும் கூட இந்த இரண்டு
முறைகளையும் ஒன்றாகவே கருதி தனது அறிக்கையினைத் தயாரித்திருப்பது
அதிர்ச்சியளிக்கிறது.

ஏனெனில், தேசிய பெறுகை முறையில் தேசிய பத்திரிகையில் பிரசுரித்து
கூறுவிலை பெறுவதற்குப் பதிலாக பல கோடி பெறுமதியான உணவு ஒப்பந்தத்தை
எவ்வித நடைமுறைகளுக்கும் பொருந்தாத வகையில் சில்லறைப் பண்டங்களை
பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் முறையான கொள்ளவனவு முறையினைப்
பயன்படுத்தி ( பதிவு செய்யப்படாதவர்களை உள்வாங்கி) வழங்கியுள்ளமை பாரதூரமான நிதிவிதி மீறல். இதனைத் தெளிவாகக் குறிப்பிடாமல் கணக்காய்வு அவதானிப்பு அறிக்கையானது தேசிய போட்டிப் பெறுகை முறைகளையும் (NCB/LNCB method) “வாங்குதல்” முறையினையும் (Shopping method) ஒன்றாகவே கருதித் தயாரிக்கப்பட்டிருப்பது அதைவிடப் பாரதூரமான தவறு.

உண்மையிலேயே கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிமனையானது தேசிய போட்டிப்
பெறுகை முறைக்கு (NCB/LNCB method) வழங்கப்பட்ட அனுமதியைக் கொண்டு, “வாங்குதல்” முறையில் (Shopping method) உணவு வழங்குனருக்கான கேள்வி கோரல் நடைமுறைகளை முன்னெடுத்ததா? அல்லது வேறு காரணங்களா என்பதை ஆராய தனியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்பதே மூத்த கணக்காளர்களது அபிப்பிராயமாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment