‘பஞ்ச தந்திரம்’ படத்தின் 2-ம் பாகம் தொடங்கப்படுமா என்ற ரசிகரின் கேள்விக்கு ஸ்ரீமன் பதிலளித்துள்ளார்.
கமல்ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் ‘பஞ்சதந்திரம்’. தேவா இசையமைத்த இப்படத்தை கமல் மற்றும் கிரேசி மோகன் இருவரும் இணைந்து எழுதியதை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். பி.எல்.தேனப்பன் தயாரித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மனைவிகளுக்குத் தெரியாமல் கணவர்கள் சுற்றுலா செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை முழுக்க காமெடியாக சொல்லியிருந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை முழுக்கவே காமெடி காட்சிகள் தான் என்பதால், இப்போது வரை ‘பஞ்ச தந்திரம்’ படத்துக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.
இந்தப் படம் தொலைக்காட்சியில் போடும் போதெல்லாம், சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவிப்பார்கள். ‘பஞ்ச தந்திரம்’ படத்தின் 2-ம் பாகம் குறித்து பலரும் கருத்து தெரிவித்தாலும், இதுவரை சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் பலரும் ‘பஞ்ச தந்திரம் 2’ எப்போது என்று சமூக வலைதளத்தில் ஸ்ரீமனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீமன் கூறியிருப்பதாவது:
“உங்களில் பலர் மீண்டும் மீண்டும் ‘பஞ்ச தந்திரம்’ இரண்டாம் பாகம் வருமா என்று கேட்கிறீர்கள். எனக்குத் தெரிந்த பதில் என்னவென்றால் கமல்ஹாசன் சார் முடிவு செய்தால் அது நடக்கும். இது நடக்குமா இல்லையா என்று அறிய உங்களைப் போலவே ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருக்கிறது.”
இவ்வாறு ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.