தற்போதைய காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பிரட் லீ பதிலளித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த ஓராண்டாகவே பல முக்கிய கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு தற்போது கிரிக்கெட் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019ஆம் ஆண்டு துவங்கி இந்த நெருக்கடியான காலத்தைக் கடந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும், வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன? என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயும் இதுதொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அப்போது அவரிடம் உலகின் சிறந்த பேட்ஸ்மேன், பௌலர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதலிளத்த அவர், “விராட் கோலிதான். காரணம், தற்போதைய காலகட்டத்தில் இவர்தான் நல்ல ரெக்காட் வைத்துள்ளார். வயது அதிகரிக்க அதிகரிக்கச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்கிறார். நல்ல உற்சாக மனநிலையுடன் இருப்பதால் கோலியால் எளிதில் ரன்களை குவிக்க முடிகிறது. மேலும், கிரிக்கெட் பற்றி அறிவும் அவரிடம் அதிகம் இருக்கிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “தற்போதைய காலகட்டத்தில் சிறந்த பௌலராக பாட் கம்மின்ஸ் திகழ்கிறார். நான் ஆஸ்திரேலியர், கம்மின்ஸும் ஆஸ்திரேலியர். அதனால்தான் கம்மின்ஸை புகழ்கிறேன் என நினைக்காதீர்கள். அவர் உண்மையாகவே திறமை வாய்ந்தவர். நம்பர் 1 பௌலராக இருக்கிறார். முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அளவிற்கு அவரது பந்துவீச்சு உள்ளது” எனத் தெரிவித்தார்.