கோட்டயம் அருகே சொந்த மகனை போல யானையை வள்ர்த்த யானைப் பாகன் உடல்நலக்குறைவால் இறந்தார்.
கேரள கோட்டயம் அருகே ஓமன சேட்டன் என அனைவராலும் அழைக்கப்படும் தாமோதர நாயர் (வயது 74) என்பவர் பிரம்மதத்தன் என்ற யானையை கடந்த 24 வருடமாக வளர்த்து வந்தார்.
சொந்த மகனை போல பிரம்மதத்தனை வளர்த்து வந்தார். யானையின் நிழலாக இருந்த ஓமன சேட்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் ஊர்மக்கள் ஒன்று கூடி அவரின் இறுதிச் சடங்கை கவனித்தனர்.
இந்த நிலையில் ஓமன சேட்டனின் உடலை பார்க்க பிரம்மதத்தனை அழைத்து வந்தனர். யானை பாகனின் உடலை பார்த்து தனது சொந்த தந்தையை போல கண்ணீர் விட்டு அழுதது. வானத்தை பார்த்து தும்பிக்கையை 3 முறை சுழற்றி கண்ணீர் விட்டு பிளிறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் சொந்த தகப்பனே இறந்தாலும் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வராமல் அடுத்த வேலைகளை கவனிக்க செல்லும் மனிதர்களின் மத்தியில், யானை கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.
இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் சிறந்த மனிதநேயன் என ஓமன சேட்டனை பாராட்டி வருகின்றனர். அதே போல ஒரு யானையை அன்பால் கட்டிப்போட்டு, தனது சோகத்தை பிளிறி காட்டிய யானையையும் பாராட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.