281.4ம் இலக்க சட்டத்தின் கீழ் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் ஒத்துழைக்காவிடின் நீதிமன்றை நாடவும் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று பரவல் நிலை மற்றம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டது.
இதன்போது கரைச்சி பிரதேச சபை எல்லையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் இரண்டிலும் பலர் பணி புரியும் நிலையில், அங்கு தொற்று அபாயம் காணப்படுவதால் அவ்வாடை தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு அமைவாக குறித்த ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு பிரதேச சபைகள் சட்டத்தின் 281.4ம் இலக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், தொற்று நோய் ஒன்று பரவும் சந்தர்ப்பத்தில் குறித்த சட்ட விதிகளை பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அதற்கு சபையின் பூரண அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனவும் தவிசாளர் சபையிடம் முன்வைத்தார்.
அதற்கு அமைவாக இன்றைய அமர்வில் குறித்த சட்டத்தை பயன்படுத்தி ஆடைத்தொழிற்சாலைகள் இரண்டையும் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் சபையில் தீர்மானத்தை அறிவித்தார்.