கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து சம்பவத்தில் கிராம சேவகரும், அவரது மனைவியும் பலியாகினர்.
நேற்று இரவு யாழ்- மன்னார் வீதியில், ஜெயபுரம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த முழங்காவில் கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி ந.சுமித்தா (44) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று இரவு ஏழு மணியளவில் இருவரும் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது முழங்காவில் பல்லவராயன்கட்டுச் சந்தியில் வீதியில் இருவரும் வீதியில் வீழ்ந்து கிடப்பதனை அவதானித்தவர்கள் இராணுவத்தின் உதவியுடன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிராம அலுவலரை முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதன் முன் பட்டா ரக வாகனத்தில் கிராம அலுவலரின் மனைவியை முழங்காவில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் அங்கு மரணமடைந்துவிட்டார்.
கிராம அலுவலர் சம்பவ இடத்திலேயே இறந்திருந்திருந்தாக தெரிவிக்கின்றனர்.
அவர்கள் எப்படி விபத்திற்குள்ளானார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
அந்த பகுதி யானைகளின் நடமாட்டமுள்ள பகுதி. யானைத் தாக்குதலிற்கு உள்ளானார்களா என்ற சந்தேகமும் உள்ளது.
