மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்துவரும் அகதிகளில் ஒரு சிறுவன் பிளாஸ்டிக் சோடா பாட்டில்களை தன் உடலில் கட்டிக்கொண்டு கடலில் அழுதுகொண்டே நீந்தி ஸ்பெயின் எல்லையை அடைந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் எல்லையில் அமைந்துள்ளது சியூட்டா. கடற்கரை நகரமான சியூட்டா மொராக்கோவில் இருந்தாலும் இது ஐரோப்பியா நாடான ஸ்பெயினின் ஒரு பகுதி.
வறுமை, உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அவ்வப்போது மொராக்கோ நாட்டிலுள்ள சியூட்டா பகுதியிலுள்ள எல் தாராஜல் கடற்கரையிலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு கடல்வழியாக நீந்தி இடம்பெயர்ந்து வந்தனர். ஆனால் இந்த வாரத்தில் மட்டும் திடீரென 8,000 பேர் வரை அகதிகளாகப் புலம்பெயர்ந்துள்ளனர். திடீரென இவ்வளவு அதிகமான மக்கள் வருவதை அறிந்த ஸ்பெயின் அரசு அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. பின் காவல்துறையினரைக் கொண்டு அகதிகளில் பலர் திருப்பி அனுப்பப்பட்டும், குழந்தைகள் ஸ்பெயினிலுள்ள அகதிகள் முகாமிலும் தங்கவைக்கப்பட்டனர்.
அகதிகளாகப் புலம்பெயர்ந்த 8,000 பேரில் ஒருவர்தான் அந்தச் சிறுவன். ஸ்பெயின் நாட்டுக்குச் செல்வதற்குக் கடலில் நீந்தித்தான் செல்லவேண்டும் என்பதால், தன் உடல் முழுவதும் பிளாஸ்டிக் சோடா பாட்டில்களைக் கட்டிக்கொண்டு கடலை நீந்திக் கடக்க முயன்றிருக்கிறார். இந்தநிலையில் ஸ்பெயினிலுள்ள காவல்துறையினரால் கடலிலிருந்து இந்தச் சிறுவன் மீட்கப்பட்டார். அழுதுகொண்டே அந்தச் சிறுவன் கடலில் மிதக்கும் காட்சி மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இது போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரப்பர் மிதவைகள் கொண்டும், மிகச் சிறிய படகுகள் கொண்டும் எல்லையைக் கடக்கின்றனர்.
இது குறித்து ஸ்பெயின் அரசு கூறுகையில் ‘இவ்வளவு பெரிய தொகையிலான மக்கள் எல்லையைக் கடக்கும்வரை, அவர்களைக் கட்டுப்படுத்தாமல் மொராக்கோ அரசு வேடிக்கை பார்க்கிறது. மொராக்கோ அரசு பிளாக்மெயில் அரசாக உள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ள பாலிசாரியோ முன்னணியின் தலைவரான பிரஹிம் காலிக்கு சிகிச்சை அளிக்க முன் வந்த ஸ்பெயினின் முடிவால் மொராக்கோ அரசு கோபமடைந்துள்ளது. இவர் பல ஆண்டுகளாக மொராக்கோ அரசை எதிர்த்துப் போராடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு புலம்பெயர்வதை தடுப்பதற்காக புதன்கிழமை முதல் ஸ்பெயின் நாட்டின் கடற்கரைப் பகுதியிலும், மொராக்கோவிலுள்ள ஸ்பெயின் பகுதியான சியூட்டாவிலும் ஸ்பெயின் அரசு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது