வடிவேலு உடன் பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் வெங்கல ராவ். சைக்கோ தலையில் வடிவேலு கைவைக்கும் காமெடி, தேங்காய் விலை காமெடி, கொரில்லா செல் காமெடி, நாய்க்கடி டாக்டர் காமெடி என அவர்கள் இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
தற்போது வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கி தான் இருக்கிறார். அதனால் அவருடன் நடிக்கும் வெங்கல ராவ் போன்ற நடிகர்களுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம் வெங்கல ராவ். அது பற்றி சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் பேசி இருக்கிறார்.
கடந்த வருடம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நடக்கவில்லை, அதன் பின் இந்த வருடம் படங்கள் கேட்டால் எலெக்ஷன் முடியட்டும் என சொன்னார்கள், தற்போது மீண்டும் கொரோனா காரணமாக ஷூட்டிங் இல்லை, வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார் அவர்.
இதற்கு முன்பு சினிமா சண்டை கலைஞராக ரஜினி, விஜயகாந்த் படங்களில் அதிகம் பணியாற்றிய பிறகு ஒருகட்டத்தில் சண்டை போட முடியாததால் காமெடியனாக மாறிவிட்டேன் என கூறிய அவர், வடிவேலு தான் தன்னை காமெடியனாக அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.
சமீப வருடங்களாக வாய்ப்புகள் இல்லாததால் தற்போதும் அவர் வாடகை வீட்டில் தான் இருந்து கஷ்டப்படுகிறாராம். அவரது மகள், பேரன் பேத்திகள் என அனைவரும் இவரை நம்பி தான் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.