அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 அல்லது 3 மாதங்களில் அனைவர்க்கும் தடுப்பூசி போடுவது இயலாத காரியம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (கோவிஷீல்டு), பாரத் பயோடெக் (கோவேக்சின்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ரெட்டிஸ் நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தற்போது இறக்குமதி செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்க இருக்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள், மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போதுமான தடுப்பூசி கையிருப்பு இல்லை. உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘உலகில் அதிகமான மக்கள் தொகையை கொண்டு நாடுகள் பட்டியலில் நாம் முதல் இரண்டு இடங்களில் ஒன்றாக இருக்கிறோம். இதுபோன்று அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் 2 முதல் 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசியை செலுத்திட வேண்டும் என்பது முடியாத காரியம். இதில் பல காரணிகள், சவால்கள் உள்ளன. ஒட்டுமொத்த உலக மக்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள 2 முதல் 3 வருடங்கள் ஆகும்’’ என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.