உத்தரபிரதேச மாநில வருவாய் மற்றும் வெள்ள கட்டுப்பாடுத்துறை அமைச்சர் விஜய் கஷ்யப் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் வருவாய் மற்றும் வெள்ள கட்டுப்ப்பாட்டுத்துறையின் அமைச்சராக விஜய் கஷ்யப் செயல்பட்டு வந்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் கஷ்யப் முசார்பர் நகர் மாவட்டம் ஷார்டவாலா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.
இதற்கிடையில், அமைச்சரவையில் விஜய் கஷ்யப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் விஜய் கஷ்யப் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.அவரது உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில்,
பாஜக தலைவரும், உத்தரபிரதேச அரசில் மந்திரியாக செயல்பட்டு வந்த விஜய் கஷ்யப்பின் மரணம் மிகுந்த கவலைகளிக்கிறது. அவர் அடிமட்டத்துடன் இணைந்த ஒரு தலைவராக இருந்தார், எப்போதும் பொது நலன் சார்ந்த பணிகளில் அர்ப்பணிப்புடன் இருந்தார். துக்ககரமான இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி! என தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் 3வது அமைச்சர் இவர் ஆவார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு கமல் ராணி வருண் மற்றும் சேத்தன் ஷஹன் ஆகிய 2 அமைச்சர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.