கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொது மக்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி,
பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெற வேண்டும்.
தடுக்கப்படுவர்: பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை வாங்குவதற்கு அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்ல முற்பட்டால் தடுக்கப்படுவர்.
தொற்று அதிகரிப்பு: கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. இப்போது நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி நோய்த் தொற்று உள்ளோரின் எண்ணிக்கை 1.83 லட்சமாக உள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.